கல்வியும், மருத்துவமும் தமிழக அரசின் இருகண்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

கல்வியும், மருத்துவமும் தமிழக அரசின் இருகண்கள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கல்வியும், மருத்துவமும் தமிழக அரசின் இருகண்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

கல்வியும், மருத்துவமும் தமிழக அரசின் இருகண்கள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

வேலூர்: கல்வியையும், மருத்துவத்தையும் இரு கண்களாக பாவித்து தமிழக அரசு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதனடிப்படையில், பழுதடைந்த பள்ளி வகுப்பறைக் கட்டடங்களை சீரமைத்து புதிய கட்டடங்கள் கட்டுவதற்காக பேராசிரியர் அன்பழகன் பள்ளி உள்கட்டமைப்புத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

தமிழக ஊரக வளர்ச்சி, உள்ளாட்சித் துறை மூலம் பேராசிரியர் அன்பழகன் பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 36 மாவட்டங்களிலுள்ள 2381 ஊராட்சி ஒன்றிய தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் ரூ.784 கோடி மதிப்பில் 5351 புதிய வகுப்பறை கட்டடங்கள் கட்டப்பட உள்ளன. இதில், வேலூர் மாவட்டத்தில் 55 தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் ரூ.15.96 கோடி மதிப்பில் 114 வகுப்பறைகள் கட்டப்படுகின்றன.

இதற்கான அடிக்கல் நாட்டு விழா வேலூர் மாவட்டம், காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்றது. இதில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று கட்டுமானப் பணிகளை தொடங்கி வைத்து பேசியது:

பேராசிரியர் அன்பழகன் பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் தமிழகத்தில் பழுதடைந்துள்ள பள்ளி வகுப்பறைக் கட்டடங்களை புதுப்பிக்க, சீர்செய்திட வேண்டும் என்ற நல்ல எண்ணத்துடன் உருவாக்கப்பட்டதாகும். இத்திட்டத்தின்கீழ் ரூ.2400 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, முதற்கட்டமாக தமிழகம் முழுவதும் ரூ.784 கோடி மதிப்பில் 5351 புதிய வகுப்பறைக் கட்டடங்கள் கட்டப்படுகின்றன.

தமிழக அரசை பொறுத்தவரை எப்போதும் கல்வியையும், மருத்துவத்தையும் இரு கண்களாக பாவித்து அதற்காக பணியாற்றிக் கொண்டுள்ளோம். இதைத்தான் ஒவ்வொரு நிகழ்ச்சியில் பங்கேற்கும் போதும் குறிப்பிட்டுக் கூறிவருகிறேன். தமிழக முதல்வராக நான் பொறுப்பேற்றதற்கு பிறகு பல்வேறு மாவட்டகளுக்கு செல்லும்போது அங்கு திடீர் ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறேன். 

அப்படிப்பட்ட ஆய்வின்போது பல பள்ளிகளில் மாணவர்கள் காலை உணவருந்தாமல் வருவதை அறிந்து அதிர்ச்சியடைந்தேன். உடனடியாக அதிகாரிகள் மூலம் ஆய்வு நடத்தி பள்ளிகளில் நடைமுறையில் உள்ள மதிய உணவுத் திட்டம் போன்றே காலை உணவு திட்டத்தையும் கடந்த செப்டம்பர் 15 முதல் தொடங்கி செயல்படுத்தி வருகிறோம். தற்போது ஒரு சில மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டுள்ள இத்திட்டம் விரைவில் தமிழகம் முழுவதும் நிறைவேற்றப்படும்.

இதேபோல், பள்ளிக்கட்டடங்களின்றி மாணவர்கள் மரத்தடியில் கல்வி கற்பதை அறிந்து, அவர்கள் நல்ல சூழ்நிலையில் கல்வி கற்க பேராசிரியர் அன்பழகன் பள்ளி உள்கட்டமைப்பு திட்டம் தொடங்கி ரூ.2400 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், பல பள்ளிகள் மேம்படும் சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது. இதனை பள்ளி மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

முன்னதாக, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பேசியது: தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதற்கு பிறகு அவர் பள்ளிக்கல்வி வளர்ச்சிக்காக ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். ஏற்கனவே, அனைத்து கிராமங்களும் சீரான வளர்ச்சி பெற்றிட அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் உருவாக்கப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, 1.50 லட்சம் பழுதடைந்த கிராமப்புற சாலைகளில் 10 ஆயிரம் கி.மீட்டர் சாலைகளை சீர்செய்திட ரூ.4 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

இதன்தொடர்ச்சியாக, அரசியல் வரலாற்றில் இல்லாத வகையில் பள்ளி வகுப்பறை கட்டடங்களை சீர்செய்திட பேராசிரியர் அன்பழகன் பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பள்ளிக் கல்வித்துறையும், ஊரக வளர்ச்சித்துறையும் இணைந்து மேற்கொண்ட ஆய்வில், தமிழகம் முழுவதும் 973 பள்ளிகள் கட்டடங்களின்றி செயல்படுவது கண்டறியப்பட்டது. இதற்கு மாற்றாக 11000 வகுப்பறை கட்டடங்கள் கட்ட வேண்டும் என்று இந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில், முதற்கட்டமாக 2381 கிராமப்புற பள்ளிகளில் 5351 புதிய வகுப்பறைகள் கட்ட ரூ.784 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதி அனைத்து மாவட்டங்களுக்கும் சமமாக பிரித்து அளிக்கப்பட்டு தற்போது பணிகள் தொடங்கப் பட்டுள்ளது என்றார்.

இந்நிகழ்ச்சியில், தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, கைத்தறி துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, மக்களவை உறுப்பினர்கள் எஸ்.ஜெகத்ரட்சகன் (அரக்கோணம்), டி.எம்.கதிர்ஆன்ந்த் (வேலூர்), சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஏ.பி.நந்தகுமார், ப.கார்த்திகேயன், அமலுவிஜயன், வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார், மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com