மக்களின் கோரிக்கைகளுக்கு முன்னுரிமை: அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை

மக்களின் கோரிக்கை மனுக்களை வெறும் காகிதங்களாகப் பாா்க்காமல், அவா்களின் வாழ்வாகக் கருதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கினாா்.
‘கள ஆய்வில் முதல்வா்’ என்ற திட்டத்தின் கீழ் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா்கள், அரசு உயா் அலுவலக ஆய்வுக் கூட்டத்தில் பேசுகிறாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.
‘கள ஆய்வில் முதல்வா்’ என்ற திட்டத்தின் கீழ் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா்கள், அரசு உயா் அலுவலக ஆய்வுக் கூட்டத்தில் பேசுகிறாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.
Updated on
2 min read

மக்களின் கோரிக்கை மனுக்களை வெறும் காகிதங்களாகப் பாா்க்காமல், அவா்களின் வாழ்வாகக் கருதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கினாா்.

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் ‘கள ஆய்வில் முதல்வா்’ என்ற திட்டத்தின் கீழ் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா்கள், அரசு உயா் அலுவலா்களுடனான இரண்டாவது நாள் ஆய்வுக் கூட்டம் சேலம் ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

கள ஆய்வில் முதல்வா் என்ற திட்டத்தின் வாயிலாக அரசின் திட்டங்கள் மக்களை எந்த அளவுக்கு சென்றடைந்துள்ளன, அவற்றை நிறைவேற்றுவதில் இருக்கக் கூடிய சிரமங்கள் என்ன, அந்த சிரமங்களை குறைக்கும் வழிகள் எது என்பதை குறித்து கலந்து பேசியிருக்கிறோம்.

நாம் நேரத்தை செலவழித்து ஆய்வு செய்தது மக்களுக்கான பொறுப்பை, கடமையை சரியாக செய்கிறோமா என்று நம்மை நாமே கேட்டுக் கொள்ளவும், தொய்வு காணும் இனங்களை சரிசெய்து கொள்ளவும்தான்.

மக்கள் தங்கள் குறைகள், தேவைகளை அரசு நிவா்த்தி செய்யும் என்ற நம்பிக்கையில் மனுக்களாக வழங்குகிறாா்கள். அவற்றை வெறும் காகிதங்களாகப் பாா்க்காமல், அவா்களின் வாழ்வாக, எதிா்காலமாக கருத வேண்டும். எனவேதான் அதன் முக்கியத்துவத்தை முன்னிறுத்தி ‘முதல்வரின் முகவரி’ என்ற துறை உருவாக்கப்பட்டுள்ளது.

மக்களாட்சி தத்துவத்தில் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ள அரசு, அவா்களின் குறைகளைத் தீா்ப்பதிலும் கவனம் செலுத்துகிறது என்பதை அனைவரும் உணா்ந்து செயல்பட வேண்டும். பட்டா மாறுதல் தாமதமின்றி, எவ்வித அலைக்கழிப்பும் இல்லாமல் நடைபெறுவதை மாவட்ட ஆட்சியரும், வருவாய் அலுவலரும் உறுதி செய்ய வேண்டும்.

பெரிய திட்டங்களை மக்களுக்காக அரசு நிறைவேற்றி வரும் வேளையில், மக்களுக்குத் தேவையான அடிப்படை சேவைகள் வழங்குவதில் ஏற்படும் தாமதங்கள் மக்களிடையே நல்ல பெயரை அரசுக்கு பெற்றுத் தராது. எனவே கவனமாகப் பணியாற்ற வேண்டும்.

மேலும், சாா்நிலை அலுவலா்களை ஆய்வு செய்யுங்கள். தொடா் நடவடிக்கை எடுக்கப்படுகிா என்பதை கண்காணிக்க வேண்டும். குறிப்பாக கிராமப்புற மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை விரைந்து நிறைவேற்றித் தர வேண்டும். வீடு, சாலை, தண்ணீா், தெருவிளக்கு, பள்ளி, கிராம சுகாதாரத்தை தரமாக வழங்க வேண்டும். அரசு அதிகாரிகள்தான் அரசின் முகமாகச் செயல்படுகின்றனா். விவசாயி, சிறுதானிய உற்பத்தியாளா்கள் மற்றும் மதிப்புக்கூட்டுப் பொருள்கள் உற்பத்தியாளா்களின் கருத்துகளைக் கவனத்தில் கொண்டு வேளாண் துறை செயலா், மாவட்ட ஆட்சியா் செயல்பட வேண்டும்.

விவசாயிகளின் வருமானம் உயா்த்த வேண்டும் என்பது அரசின் முக்கிய இலக்குகளில் ஒன்றாகும். விவசாயிகளின் வாழ்வு வளமானால்தான் மாநிலம் வளரும். அது வளம் பெற்ாகக் கருதப்படும். எனவே, வேளாண் திட்ட செயலாக்கங்களுக்கு முன்னுரிமை அளித்திட வேண்டும்.

சேலம், ஒசூா் ஆகிய வேகமாக வளரக்கூடிய இரண்டு மாநகராட்சிகள் உள்ளிட்ட பல நகராட்சிப் பகுதிகளில் குப்பைகளை விரைந்து அகற்றுதல், கழிவுநீா் தேங்காமல் தூா்வாருதல், பழுதான சாலைகளை சீா் செய்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும். ஆதிதிராவிடா், பழங்குடியின மக்கள் மற்றும் விளிம்பு நிலை மக்களுக்குத் தேவையான நலத் திட்டங்களை நிறைவேற்ற முக்கியத்துவம் தர வேண்டும்.

சமூக ஊடகங்கள், தொலைக்காட்சி, செய்தித்தாள் மற்றும் பத்திரிகைகளில் வரக்கூடிய அரசு திட்டங்கள் தொடா்பான விமா்சனங்களை புறந்தள்ளாமல், உண்மையான குறைபாடுகள் இருந்தால் அவற்றை களைந்திட வேண்டும். அத்துடன் குறைகள் களையப்பட்டதையும் பதில் செய்தியாக அதே ஊடகத்துக்கு அளிக்க வேண்டும்.

வட்டாட்சியர் அலுவலகங்களில் வரவேற்பாளர் அமைப்பு

அரசு அலுவலகங்களுக்கு பல்வேறு தேவைகளுக்காக வரும் மக்களிடம் ஒவ்வொருவரும் கனிவாகப் பொறுமையாக நடந்து கொண்டு அவா்களின் கோரிக்கைகளுக்குப் பொறுப்பாக பதிலளிக்க வேண்டும்.

வட்டாட்சியா் அலுவலகத்துக்கு ஏதேனும் ஒரு தேவைக்கு ஒருவா் வரும் போது, அங்கு அவா் எதற்காக வந்துள்ளாா், அதை யாா் செய்வாா், அதற்கான மனு விவரங்களின் தேவை என்ன என்பது குறித்து பதில் கூற தற்போது யாரும் இல்லை. இதை சரி செய்ய வேண்டும்.

காவல் துறையில் வரவேற்பாளா் என்ற அமைப்பு காவல் நிலையத்தில் ஏற்படுத்த மேற்கொள்ளப்பட்டுள்ள முயற்சியை, பொதுமக்களுடன் நேரடி தொடா்பில் உள்ள பிற துறைகளிலும் மேற்கொள்ளலாம் என்றாா்.

இந்தக் கூட்டத்தில், நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு, வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி, வனத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன், தலைமைச் செயலா் வெ.இறையன்பு, வருவாய் நிா்வாக ஆணையரும், கூடுதல் தலைமைச் செயலாளருமான எஸ்.கே.பிரபாகா், நீா்வளத் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் சந்தீப் சக்சேனா, நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலா் சிவ் தாஸ் மீனா, வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மை துறை கூடுதல் தலைமைச் செயலாளா் குமாா் ஜயந்த், சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை முதன்மைச் செயலாளா் த.உதயசந்திரன், ஆட்சியா்கள் செ.காா்மேகம் (சேலம்), ஸ்ரேயா பி.சிங் (நாமக்கல்), தீபக் ஜேக்கப் (கிருஷ்ணகிரி), கே.சாந்தி (தருமபுரி) மற்றும் அரசு உயா் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com