திருவாரூர் தியாகராஜர் கோயிலில் பாத தரிசனம்

திருவாரூர் தியாகராஜர் கோயிலில் பதஞ்சலி வியாக்ரபாத முனிவர்களுக்கு பாத தரிசனம் அருளும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பதஞ்சலி, வியாக்ரபாத முனிவர்கள்
பதஞ்சலி, வியாக்ரபாத முனிவர்கள்

திருவாரூர்: திருவாரூர் தியாகராஜர் கோயிலில் பதஞ்சலி வியாக்ரபாத முனிவர்களுக்கு பாத தரிசனம் அருளும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 

நாயன்மார்களால் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாக விளங்கும் திருவாரூர் தியாகராஜர் கோயில், காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 87ஆவது சிவத்தலமாகும். சப்தவிடங்க தலங்களில் தலைமை இடமாகும்.

இக்கோயிலில் திருவாதிரை உத்ஸவம் ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். திருவாதிரை உத்ஸவத்தில் பாத தரிசன நிகழ்வு விமரிசையாக நடைபெறும். தியாகராஜர் கோயிலின் மூலஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் தியாகராஜரின் திருமுகத்தை மட்டுமே மற்ற நாள்களில் பக்தர்கள் காண முடியும். மற்ற அங்கங்கள் அனைத்தும் மூடப்பட்டு, ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டும் இருக்கும். அபிஷேகத்தின்போது கரத்தின் ஒரு பகுதியையும், மார்கழித் திருவாதிரையிலும், பங்குனி உத்திரத்திலும் அவரது பாதத்தை தரிசிக்க முடியும். நிகழாண்டு, திருவாதிரை உத்ஸவத்துக்காக, டிச.12 ஆம் தேதி பந்தக்கால் நடப்பட்டது.

திருவாரூர் தியாகராஜர் கோயிலில் பாத தரிசனத்தை காண திரண்ட பக்தர்கள்
திருவாரூர் தியாகராஜர் கோயிலில் பாத தரிசனத்தை காண திரண்ட பக்தர்கள்

டிச.28 ஆம் தேதி முதல் ஜன.3 ஆம் தேதி வரை தினசரி காலையில், மாணிக்கவாசகர் திருவெம்பாவை விண்ணப்பிக்கும் நிகழ்வும், மாலையில், அருள்மிகு கல்யாண சுந்தரர்- பார்வதி ஊஞ்சல் மண்டபத்திலும், அருள்மிகு சுக்ரவார அம்பாள் பக்தகாட்சி மண்டபத்திலும் எழுந்தருளி, 8 மணிக்கு யதாஸ்தானம் திரும்பும் நிகழ்வும் நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து, ஜன.4 ஆம் தேதி இரவு யதாஸ்தானத்திலுள்ள தியாகராஜர், இரண்டாம் பிரகாரத்திலுள்ள ராஜநாராயண மண்டபத்துக்கு எழுந்தருளினார். இதையடுத்து, ஜன.5 ஆம் தேதி இரவு அருள்மிகு தியாகராஜ சுவாமிக்கு திருவாதிரை மகா அபிஷேகமும், நடராஜப் பெருமானுக்கு அபிஷேகமும் நடைபெற்றது.

இந்நிலையில், திருவாதிரை உத்ஸவத்தின் முக்கிய நிகழ்வான பாத தரிசனம் அருளும் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முன்னதாக, விளமல் பதஞ்சலி மனோகர் கோயிலிலிருந்து பதஞ்சலி, வியாக்ரபாத முனிவர்கள் புறப்பட்டு, தியாகராஜர் கோயிலுக்கு வந்து, தியாகராஜரின் பாத தரிசனத்தைக் கண்டனர்.
அப்போது அருள்மிகு நடராஜப் பெருமான் வீதியுலாவுக்குப் பிறகு சபாபதி மண்டபத்தில் எழுந்தருளினார். இதைத்தொடர்ந்து தியாகராஜர், பக்தர்களுக்கு பாத தரிசனம் அருளினார். நிகழ்ச்சியைக் காண ஏராளமான பக்தர்கள் திரண்டனர். இதனால், தியாகராஜர் கோயிலில் காலையிலிருந்து பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com