மோடி மீதான மக்களின் ஈர்ப்பு அதிகரித்து வருகிறது: அண்ணாமலை பேச்சு

பிரதமர் நரேந்திர மோடியின் மீதான மக்களின் ஈர்ப்பு அதிகரித்து வருவதாக தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
மோடி மீதான மக்களின் ஈர்ப்பு அதிகரித்து வருகிறது: அண்ணாமலை பேச்சு

நெய்வேலி: பிரதமர் நரேந்திர மோடியின் மீதான மக்களின் ஈர்ப்பு அதிகரித்து வருவதாக தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

கடலூரில் பாஜக மாநிலச் செயற்குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமை வகித்துப் பேசுகையில், குஜராத் மாநிலத்தில் பாஜக தொடர்ந்து 27 ஆண்டுகளாக ஆட்சி செய்து சாதனை படைத்து வருகிறது. 

குஜராத்தில் அண்மையில் நடந்த தேர்தலில் 53 சதவீதம் வாக்கு பெற்றுள்ளோம். தேர்தலில் போட்டியிட்ட 11 வேட்பாளர்கள்  சுமார் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளனர். 

பாஜகவை எதிர்த்து போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்கள் 128 பேர் டெபாசிட் இழந்து உள்ளனர். எஸ்சி, எஸ்டி., 40 தொகுதிகளில் 36 இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.

நமது ஜனநாயகத்தில் ஒருமுறை ஆட்சியில் இருந்தாலே மக்களின் கோபத்திற்கும், சாபத்திற்கும் ஆளாக வேண்டிய சூழல் உருவாகும். ஆனால், தொடர்ந்து 27 ஆண்டுகளாக ஆட்சி நடத்தும் பாஜக மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். மோடி மீதான ஈர்ப்பு மக்களிடம் குறையாமல் வளர்ந்து வருகிறது. குஜராத் தேர்தல் ஜனநாயகத்திற்கு ஒரு பாடம். 

ஹிமாச்சலம் பிரதேசத்தில் ஒருமுறை ஆண்ட கட்சி அடுத்த முறை ஆட்சி அமைப்பது இல்லை. அப்படி இருந்தும் கடந்த தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கும் நமக்குமான வாக்கு வித்தியாசம் ஒரு சதவீதம் மட்டுமே.

இந்த அடிப்படையில் பாஜக அபரீதமான வளர்ச்சி பெற்று வருகிறது. மக்களின் ஆதரவை பெற்றுள்ளது. உள்ளாட்சித் தேர்தலிலும் வெற்றி பெற்றுள்ளோம் என்று அண்ணாமலை பேசினார்.

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாநில செயலர் மற்றும் கோட்டப் பொறுப்பாளர் வினோத் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.

இக்கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், நிர்வாகிகள் சி.பி.ராதாகிருஷ்ணன், எச்‌.ராஜா, மேலிடப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், எம்.ஆர்.காந்தி, ஈரோடு சரஸ்வதி, திரைப்பட இயக்குநர் கங்கை அமரன்,  நடிகை நமீதா மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

கடலூர் வருகை தந்த அண்ணாமலை விடுதியில் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com