
திமுக ஆட்சிக்காலங்களில்தான் சென்னையின் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டன என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கொளத்தூர் தொகுதியில் புதிய மேம்பாலத்தை திறந்துவைத்து அவர் பேசியதாவது, பாலங்கள், கால்வாய்கள், சாலைகள் என மக்களின் நாளைய தேவைகளையும் கருதி திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். தமிழகத்திற்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை அரசு மேற்கொண்டு வருகிறது. சென்னையின் தேவைகளை தீர்த்து வைத்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி.
கருணாநிதியின் வழித்தடத்தில் திராவிட மாடல் ஆட்சி செயல்பட்டு வருகிறது. திமுக ஆட்சிக்காலங்களில் எண்ணற்ற திட்டங்கள் சென்னையில் செயல்படுத்தப்பட்டுள்ளன. நான் மேயராக இருந்தபோது மாநகராட்சி சார்பில் சென்னையில் பல பாலங்களை கட்டினோம். திமுக ஆட்சிக்காலங்களில்தான் சென்னையின் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டன.
புதிதாக திறக்கப்பட்ட மேம்பாலம் மூலம் ஏராளமான மக்கள் பயன்பெறுவர். மழைநீர் வடிகால், மெட்ரோ திட்டப் பணியால் பாதிக்கப்பட்ட சில சாலைகளை சீரமைக்க உத்தரவிட்டுள்ளேன் என்றார். கொளத்தூர் தொகுதியில் முடிவுற்ற பல்வேறு திட்டங்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று நேரில் தொடக்கி வைத்தார். பூங்கா, வகுப்பறைகளைத் தொடர்ந்து பெரம்பூர் ஸ்டீபென்சன் சாலை உயர்மட்ட மேம்பாலத்தையும் அவர் திறந்து வைத்தார்.
இந்நிகழ்வின் போது அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு, சென்னை மேயர் ப்ரியா உள்ளிட்டோர் உடனிருந்தனர். ஸ்டீபன்சன் சாலையில் ஓட்டேரி நல்லா கால்வாய்க்கு மேல் செல்லும் வகையில், 824 மீட்டர் நீளத்தில், 66 கோடி செலவில் இந்த மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. பணிகள் தொடங்கி 18 மாதத்திற்குள் முடிக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மேம்பாலம் திறக்கப்பட்டது.
இந்த பாலம் பயன்பாட்டிற்கு வந்ததையடுத்து கொளத்துார், பெரம்பூர், திரு.வி.க., நகர் தொகுதி மக்கள் மட்டுமின்றி அவற்றின் சுற்று வட்டாரங்களில் இருந்து, பி.பி., சாலை, கணேசபுரம், புளியந்தோப்பு வழியாக டவுட்டன், வேப்பேரி, சென்ட்ரல், பாரிமுனை செல்வோர் போக்குவரத்து நெரிசலின்றி குறித்த நேரத்தில் பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.