நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை: முல்லைப் பெரியாறு அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு

முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் திங்கள்கிழமை பெய்த மழையால் அணைக்குள்  நீர் வரத்து அதிகரித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை: முல்லைப் பெரியாறு அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு

கம்பம்: முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் திங்கள்கிழமை பெய்த மழையால் அணைக்குள்  நீர் வரத்து அதிகரித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேற்கு தொடர்ச்சி மலையில் தென்மேற்கு பருவமழை திங்கள்கிழமை பெய்யத் தொடங்கியது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான பெரியாற்றில் 37.6 மில்லி மீட்டர் மழையும், தேக்கடி ஏரியில் 39.4. மி.மீ. மழையும் பெய்தது. இதனால் அணைக்குள் விநாடிக்கு 601 கன அடி தண்ணீர் வந்தது. 

மின் உற்பத்தி அதிகரிப்பு :

அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழைபெய்வதற்கான அறிகுறிகள் ஏற்பட்டதால் 300 கன அடியாக திறக்கப்பட்ட தண்ணீர், திங்கள்கிழமை முதல் தமிழக பகுதிக்கு விநாடிக்கு 400 கன அடியாக தண்ணீர் திறக்கப்பட்டது. செவ்வாய்க்கிழமையும் 400 கன அடியாக வெளியேற்றப்பட்ட நிலையில் தேனி மாவட்டம் லோயர்கேம்ப்பில் உள்ள பெரியாறு மின்சார உற்பத்தி நிலையத்தில் ஒரு மின்னாக்கி முழுவதுமாக இயக்கப்பட்டு  36 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

விவசாயிகள் மகிழ்ச்சி :

மே மாத இறுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என எதிர்பார்த்த நிலையில் ஜூலை மாதம் தான் சிறிதளவு பெய்யத் தொடங்கியது. ஏற்கனவே அணையின் நீர்மட்டம் 115 அடிக்கு கீழாக வந்தாலும் பொதுப்பணித் துறையினர் கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் நலன் கருதி ஜூன் 1 ஆம் தேதி முதல் 300 கன அடி தண்ணீர் திறந்து விட்டனர். இந்த நிலையில் சுமார் 32 நாட்களுக்கு பிறகு 100 கன அடி தண்ணீர் திறப்பு அதிகரித்து 400 கன அடியாக திறந்து விட்டதால் வெட்டுக்காடு, குள்ளப்பகவுண்டன் பட்டி, கூடலூர், ஆங்கூர்பாளையம், கம்பத்தில் ஒரு சில பகுதிகளில் முதல் போக நன் செய் சாகுபடி பணிகளில் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் செய்து வருகின்றனர்.

அணை நிலவரம் :

செவ்வாய்க்கிழமை அணையின் நீர்மட்டம் 114.95 அடி உயரமாகவும், நீர் இருப்பு 1718.63 மில்லியன் கன அடியாகவும், அணைக்குள் நீர் வரத்து விநாடிக்கு 601.93 கன அடியாகவும், தமிழக பகுதிக்கு நீர் வெளியேற்றம் விநாடிக்கு 400 கன அடியாகவும் இருந்தது. நீர் பிடிப்பு பகுதிகளான தேக்கடியில் 39.4 மில்லி மீட்டர் மழையும், பெரியாறு அணையில் 37.6 மி.மீ., மழையும் பெய்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com