மதுரை மாவட்டத்தில் வீடுகளில் கிளிகள் வளர்க்க தடை: வனத்துறை அறிவிப்பு

மதுரை மாவட்டத்தில் வீடுகளில் கிளிகள் வளர்க்க தடை விதித்துள்ள மாவட்ட வனத்துறை, வீடுகளில் வளர்க்கும் கிளிகளை ஜூலை 17 ஆம் தேதிக்குள் வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைக்காவிட்டால் சட்ட ரீதியாக நடவடிக்கை
மதுரை மாவட்டத்தில் வீடுகளில் கிளிகள் வளர்க்க தடை: வனத்துறை அறிவிப்பு


மதுரை மாவட்டத்தில் வீடுகளில் கிளிகள் வளர்க்க தடை விதித்துள்ள மாவட்ட வனத்துறை, வீடுகளில் வளர்க்கும் கிளிகளை ஜூலை 17 ஆம் தேதிக்குள் வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைக்காவிட்டால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாடு வனவிலங்குகள் பாதுகாப்பு திருத்தச் சட்டம் 2022 இன் படி கிளிகள் பாதுகாக்கப்பட்ட பறவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக கிளிகளை வீடுகளில் வளர்ப்பதற்காக விற்பனை செய்வது தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படுகிறது. 

இந்நிலையில், மதுரை மாநகர் செல்லூர் மற்றும் மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் வீடுகளில் நூற்றுக்கணக்கான கிளிகள் வளர்க்கப்படுவதாகவும், அதற்கு அதனுடைய உடல்வாகுக்கு ஒவ்வாத உணவுகள் வழங்கப்பட்டு வருவதாகவும், கிளிகளை வளர்ப்பவர் கிளிகளின் இறக்கைகளை வெட்டுதல், கிளிகளை காயப்படுத்துதல் போன்ற செயல்களில் ஈடுபடுவதாகவும் தொடர்ந்து வனத்துறைக்கு புகார்கள் வந்துள்ளன. 

இதனைத் தொடர்ந்து செல்லூர் பகுதியில் வீடுகளில் வளர்க்கப்பட்டு வந்த 100க்கும் மேற்பட்ட கிளிகளை வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

இதுபோன்று வீட்டில் கிளி வளர்ப்பு செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வனத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கிளிகள் வளர்க்கும் பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து வருகின்ற ஜூலை 17 ஆம் தேதிக்குள் கிளிகளை வனத்துறையிடம் ஒப்படைக்க கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாகவும், கால அவகாசத்தை மீறி கிளிகளை வீடுகளில் வளர்க்கும் பட்சத்தில் வன உயிரினங்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக வனத்துறை சார்பாக துண்டு பிரசாரங்கள் மற்றும் ஒலிபெருக்கிகள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com