
காமராஜர் பிறந்தநாளையொட்டி பள்ளி மாணவர்களுக்கு பேனா வழங்கும் தூய்மைப் பணியாளர் விஷ்ணுபிரியா.
சங்ககிரி: காமராஜர் பிறந்தநாளான இன்று சங்ககிரியில் தூய்மைப் பணியாளர் ஒருவர் சாலையில் சென்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பேனா வழங்கியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம், சங்ககிரியில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருக்கும்போது ஒரு வீட்டின் உரிமையாளர் மாணவர்களுக்கு வழங்குமாறு கொடுத்த பேனாக்களை காமராஜர் பிறந்தநாளில் சாலையில் அரசு பள்ளிக்கு சென்ற மாணவர்களுக்கு தூய்மை பணியாளர் சனிக்கிழமை பேனாக்களை வழங்கிய சம்பவம் பொதுமக்கள், சமூக ஆர்வலர்களை நெகிழ்ச்சி அடைய செய்தது.
சங்ககிரி பேரூராட்சியில் தூய்மைப் பணியாளராக பணியாற்றி வருபவர் விஷ்ணுபிரியா. அவர் சங்ககிரி மலையடிவாரம் வேல்முருகன், அண்ணாநகர், முஸ்லீம் தெரு உள்ளிட்ட பகுதிகளில் தினசரி தள்ளுவண்டியில் வீடு வீடாகச் சென்று குப்பைகளை சேகரித்து வருகிறார்.
இதையும் படிக்க | காமராஜர் பிறந்தநாள்: அரசுப்பள்ளி விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை!
இந்நிலையில் இன்று(சனிக்கிழமை) அப்பகுதியில் பணியில் ஈடுபட்டிருக்கும்போது ஒரு வீட்டின் உரிமையாளர் அவரது மகன் கேரளத்தில் பணியாற்றி வருவதாகவும், அவர் மாணவர்களுக்கு வழங்குமாறு 50 பேனாக்களை அவரிடம் கொடுத்துள்ளார். மகனின் வேண்டுகோளை நிறைவேற்ற எண்ணிய தாய், தூய்மைப் பணியாளரிடம் கொடுத்து மாணவர்களுக்கு வழங்குமாறு கூறியுள்ளார்.
இதனையடுத்து இன்று காமராஜர் பிறந்தநாளை அறிந்த தூய்மைப் பணியாளர் அடுத்த தெருவில் பணியில் ஈடுபட்டிருக்கும்போது சங்ககிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த மாணவர்களை அழைத்து பேனாக்களை வழங்கி காமராஜரின் பிறந்தநாளை நினைவு கூர்ந்து நன்றாகப் படிக்க வேண்டும் என அறிவுறுத்தினார். பின்னர் எப்பொழுதும்போல அவரது பணியினைத் தொடர்ந்தார்.
இந்நிகழ்வினைப் பார்த்த பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் தூய்மைப் பணியாளரின் நேர்மையையும், சேவையையும் பாராட்டினர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...