
தமிழகத்தில் கோவை, நெல்லை, தஞ்சை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் காலை முதல் தேசிய புலனாய்வு முகமை(NIA) அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
தஞ்சை, நெல்லை, உசிலம்பட்டி, கோவை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்த பாமக பிரமுகர் ராமலிங்கம் கடந்த 2019 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக ஏற்கனவே என்.ஐ.ஏ. அதிகாரிகள் 13 பேரை கைது செய்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் 20க்கும் மேற்பட்ட இடங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா மற்றும் எஸ்டிபிஐ போன்ற அமைப்புக்களின் நிர்வாகிகளின் இல்லங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
கோவையில்....
அதன் ஒரு பகுதியாக கோவை கோட்டைமேடு பகுதியில் உள்ள எச்.எம்.பி.ஆர் வீதியில் பிஎப்ஐ அமைப்பின் முன்னாள் நிர்வாகி அப்பாஸ் என்பவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக அங்கு காவல் துறையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நெல்லையில்.....
திருநெல்வேலி மாவட்டம், மேலப்பாளையம் ஹக் காலனியில் உள்ள எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வீட்டில் ஞாயிற்றுக்கிழமை காலையில் தேசிய புலனாய்வு முகமையைச் சேர்ந்த டிஎஸ்பி ராஜீவ்குமார் தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழுவினர், சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக தொடர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதையொட்டி மேலப்பாளையம் காவல் ஆய்வாளர் அருண் மகேஷ் தலைமையில் ஏராளமான காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தஞ்சையில்.....
தஞ்சை மாவட்டத்தில் தஞ்சாவூர், கும்பகோணம், பாபநாசம், ராஜகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காலை முதல் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தஞ்சை நடராஜபுரம் தெற்கு காலனியில் உள்ள எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்த பக்ரூதீன், கும்பகோணத்தை சேர்ந்த அப்துல் மஜீத், ராஜகிரி பகுதியை சேர்ந்த முகமது பாரூக், திருப்புவனம் பகுதியை சேர்ந்த முகமது அலி ஜின்னா ஆகியோர் வீடுகளில் காலை 6 மணி முதல் சோதனை நடைபெற்று வருகிறது.
என்.ஐ.ஏ. டிஎஸ்பி தலைமையில் நடைபெறும் இந்த சோதனையில் சுமார் 20-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிக்க: நீண்ட கால முதல்வா்: ஜோதி பாசுவை முந்தி நவீன் பட்நாயக் இரண்டாமிடம்!

மேலும், புதுக்கோட்டை மாவட்டம், உசிலங்குளம் எஸ்டிபிஐ கட்சியைச் சேர்ந்த ரஷீத் என்பவரின் வீட்டிலும் தேசிய புலனாய்வு முகமையைச் சேர்ந்த அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...