
மத்தியில் முதன்முதலில் பாஜக ஆட்சியமைக்க அரும்பாடுபட்டவர் ஜெயலலிதா என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
ஆங்கில ஊடகத்துக்கு பேட்டியளித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்திருந்தார்.
இதற்கு அதிமுக தலைவர்கள் கடுமையான விமர்சனத்தை முன்வைத்த நிலையில், இன்று நடைபெற்ற அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அண்ணாமலைக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த இபிஎஸ், அதிமுக கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை வாசித்துக் காட்டினார்.
அதில், “ஜெயலலிதா நற்பெயருக்கும், புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தும் நோக்கத்தில் பொதுவெளியில் ஏற்றுக்கொள்ள முடியாத, திட்டமிட்டு உள்நோக்கத்துடன் அவதூறு கருத்தை பேட்டியாக அண்ணாமலை கொடுத்துள்ளார். இதன் காரணமாக, ஜெயலலிதாவின் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மனதில் மிகுந்த வேதனையையும், மனஉளைச்சலையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
பாஜக தலைவர்கள் வாஜ்பாய், அத்வானி மற்றும் பல்வேறு தேசிய கட்சிகளின் மூத்த தலைவர்கள், பிற மாநில முதல்வர்கள் உள்ளிட்ட தலைவர்கள் பலரும் ஜெயலலிதா மீது மதிப்பும், மரியாதையும் கொண்டிருந்தார்கள். பல தலைவர்கள் ஜெயலலிதாவின் இல்லத்திலேயே சந்தித்து ஆலோசனை நடத்தி இருக்கிறார்கள்.
பிரதமர் நரேந்திர மோடி, ஜெயலலிதா மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் வைத்திருக்கிறார். சென்னையில் ஜெயலலிதாவை இல்லத்தில் சந்தித்து பல்வேறு ஆலோசனைகளையும் நடத்தி இருக்கிறார்.
தற்போதைய தேசிய கட்சியான பாஜக, மத்தியில் ஆட்சிக்கு வருவதற்கு மூலக் காரணமே, தமிழகத்தில் அதிமுக தலைமையில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து அறிமுகப்படுத்தியதுதான். 1998-ஆம் ஆண்டு முதன்முதலில் மத்தியில் பாஜக ஆட்சி அமைய, பெரும்பான்மையான அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை அளிக்கச் செய்ததோடு, பாஜக சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழகத்தில் வெற்று பெறுவதற்கும் அரும்பாடுபட்டவர்.
அதேபோல், 20 ஆண்டுகளாக தமிழக சட்டப்பேரவையில் பிரதிநிதித்துவம் இல்லாமல் இருந்த பாஜகவுக்கு 4 எம்எல்ஏக்களை பெற்றுக் கொடுத்தவர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
இத்தகைய போற்றதலுக்குரிய ஜெயலலிதாவை, எந்தவிதமான அரசியல் அனுபவமும், முதிர்ச்சியும் அற்ற அண்ணாமலை திட்டமிட்டு, உள்நோக்கத்துடன் பொறுப்பற்ற முறையில் பேட்டி அளித்துள்ளதற்கு அதிமுக சார்பில் கடும் கண்டங்களை தெரிவித்துக் கொள்கிறோம்” எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும், மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய இபிஎஸ், அண்ணாமலை மீது கட்சியின் தலைமை நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், ஓரிரு நாள்களில் கூட்டணி மறுபரிசீலனை செய்யப்படும் எனக் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...