காஞ்சிபுரத்தில் உள்ள முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் நினைவு இல்லத்திலிருந்து மதிமுக துணைப் பொதுச் செயலாளர் மல்லை.சத்யா தலைமையில் தமிழக ஆளுநரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கோயில் வடக்கு மாட வீதியில் முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் நினைவு இல்லத்திலிருந்து மதிமுக கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கியது. மதிமுக மாநில துணைப் பொதுச்செயலாளர் மல்லை.சத்யா தலைமையில் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் அண்ணாவின் நினைவு இல்லத்தில் உள்ள அண்ணாவின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
பின்னர் அண்ணா நினைவு இல்லத்துக்கு வெளியில் தமிழக ஆளுநரை பதவி நீக்கம் செய்ய குடியரசுத் தலைவரை வலியுறுத்துவதற்காக கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது.
இந்நிகழ்விற்கு மதிமுக மாவட்டச் செயலாளர் வளையாபதி முன்னிலை வகித்தார்.காஞ்சிபுரம் மாநகராட்சி துணை மேயர் ஆர்.குமரகுருநாதன்,காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் அளவூர்.நாகராஜன், நகர் செயலாளர் நாதன், சி.ஐடி.யூ.சார்பில் அதன் மாவட்டச் செயலாளர் இ.முத்துக்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கி.சங்கர்,விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் கே.நேரு,விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் பாசறை.செல்வராஜ்,மதிமுக நகர் செயலாளர் மகேஷ்,இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நகர் செயலாளர் ஜெ.கமலநாதன்,திராவிடர் கழக மாவட்ட தலைவர் அசோகன் ஆகியோர் உட்பட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள்,தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இதன் பின்னர் மல்லை.சத்யா கூறியது..
மதிமுக சார்பில் கையெழுத்து இயக்கம் ஜூன் 20 ஆம் தேதி தொடங்கி ஜூலை 20 ஆம் தேதி வரை தொடர்ந்து ஒரு மாதத்துக்கு நடைபெறும். தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி ஆளுநர் பதவி விலக வேண்டும், தமிழக ஆளுநரை திரும்பப் பெறக்கோரி தமிழகம் முழுவதும் பெறப்படும் கையெழுத்துக்களைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்படும். மக்கள் விரோத ஆளுநராக இருந்து வரும் ஆர்.என்.ரவியை திரும்பப் பெற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.