
குடிநீர்த் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் ஒரு நபர் ஆணையத்தின் நீதிபதி சத்தியநாராயணன் வேங்கைவயலில் இன்று ஆய்வு செய்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் பட்டியலினத்தவர் குடியிருப்பில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம் கடந்த டிச. 26ஆம் தேதி தெரிய வந்தது. இச்சம்பவம் தொடர்பாக தற்போது சிபி சிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இதுதொடர்பாக விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி சத்தியநாராயணன் தலைமையிலான ஒரு நபர் ஆணையத்தை உயர்நீதிமன்றம் அமைத்தது.
இதன் தொடர்ச்சியாக நீதிபதி சத்தியநாராயணன் சனிக்கிழமை காலை வேங்கைவயல் வந்தார். மனிதக்கழிவு கலக்கப்பட்ட தொட்டியையும், புதிதாக கட்டப்பட்ட தொட்டியையும் பார்வையிட்டார்.
மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே உள்ளிட்டோரும் வந்திருந்தனர்.
வேங்கைவயலில் நடைபெற்ற நடவடிக்கைகள் குறித்து நீதிபதி கேட்டறிந்தார்.
தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்று வருகிறது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...