
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டையில் அண்மையில் தொடங்கி வைக்கப்பட்ட தமிழ்நாடு தொல்லியல்துறையின் அகழாய்வில், செங்கல் கட்டுமானம் ஒன்று வெளிப்பட்டுள்ளது.
7 முதல் 19 செமீ ஆழத்தில் இந்த செங்கல் கட்டுமானம் வெளிப்பட்டுள்ளது. தொடர்ந்து தொல்லியல் அலுவலரும் பொற்பனைக்கோட்டை அகழாய்வுப் பணி இயக்குநருமான தங்கதுரை தலைமையிலான குழுவினர் அகழாய்வுப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பொற்பனைக்கோட்டையின் அரண்மனை மேட்டுப்பகுதியில் ஏற்கனவே நடைபெற்ற அகழாய்வில், ஆம்போரா அடிப்பாகம், கூரை ஓடுகள், பல்வேறு மணிகள் அடையாளப்படுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
செங்கல் கட்டுமானம் வெளிப்பட்டிருக்கும் தகவலுக்கு புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகத்தின் தலைவர் கரு. ராஜேந்திரன், நிறுவனர் ஆ. மணிகண்டன் ஆகியோர் வரவேற்பும் மகிழ்ச்சியும் தெரிவித்துள்ளனர்.