தமிழக மீனவர்களை விடுவிக்க கோரி மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த 37 மீனவர்களையும் அவர்களது 5 மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர்
மு.க. ஸ்டாலின் (கோப்புப் படங்கள்)
மு.க. ஸ்டாலின் (கோப்புப் படங்கள்)
Updated on
1 min read

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த 37 மீனவர்களையும் அவர்களது 5 மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 37 மீனவர்கள், மீன்பிடி படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற நிலையில், 28-10-2023 அன்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இம்மீனவர்கள் மீன்பிடித் தொழிலை மட்டுமே வாழ்வாதாரமாக கொண்டுள்ளதாகவும், குறிப்பிட்டுள்ள முதல்வர், இவ்வாறான தொடர்ச்சியான கைதுகள் மீனவ சமூகத்தினரிடையே மிகுந்த
மன உளைச்சலையும், வேதனையையும் ஏற்படுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக் கடற்படையினரின் இத்தகைய செயல்கள் தமிழ்நாட்டின் மீனவ சமுதாயத்தினரிடையே மன அழுத்தத்தையும் அச்ச உணர்வையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டு மீனவர்கள் தங்களது கோரிக்கைள் ஏற்கப்படாமல் போவதாக உணர்கிறார்கள் என்று தெரிவித்துள்ள முதல்வர், நம் மீனவர்களின் உரிமைகளுக்காக மத்திய அரசு மேலும் வலுவாகக் குரல் கொடுக்க வேண்டும் என்றும், அவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடும் வகையில் பேச்சுவார்த்தை மேற்கொள்ள வேண்டும் என்றும் தாம் விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார். 

பாக் வளைகுடா பகுதியில் நமது மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கையை தாம் மீண்டும் வலியுறுத்த விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார். 2023 அக்டோபர் மாதத்தில் மட்டும் தமிழ்நாட்டைச் சேர்ந்த 64 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு, 10 மீன்பிடிப் படகுகள் இலங்கைக் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள முதல்வர், மீனவர்கள் இதுபோன்று கைது செய்யப்படுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்றும், இலங்கைக் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் விடுவிக்கப்பட வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வரும் நிலையில் தமிழ்நாட்டு மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவது தடையின்றி தொடர்வதாக வேதனையுடன் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, இதற்கு முற்றுப்புள்ளி வைத்திடும் வகையில், இனியும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக உரிய நிலையான தூதரக வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாட்டு மக்கள் சார்பில் மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்வதாகத் தெரிவித்துள்ள முதல்வர், இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட அனைத்து மீனவர்களையும், மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சரை வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com