
மன்னார்குடி அதிமுக ஒன்றியக் குழுத் தலைவர் டி. மனோகரன்
மன்னார்குடி: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஒன்றியக்குழுத் தலைவரும் அதிமுக ஜெயலலிதா பேரவை மாவட்டத் தலைவருமான டி.மனோகரன் வீடு மற்றும் அலுவலகத்தில் சிபிசிஐடி போலீசார் வெள்ளிக்கிழமை காலை முதல் அதிரடி சோதனையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
மன்னார்குடி கர்த்தநாதபுரத்தை சேர்ந்தவர் ரோஸ்லீன். இவர் கடந்த ஏப்ரல் மாதம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தனது மாமியார் ஞானம்பாள் உயிருடன் இருக்கும் போதே அவர் இறந்துவிட்டதாக போலி இறப்பு சான்றிதழ் தாயாரித்து மன்னார்குடியில் ஞானம்பாளுக்கு சொந்தமான ரூ.20 கோடி மதிப்புள்ள 10 கிரவுண்ட் நிலத்தை மன்னார்குடி அடுத்த சேரன்குளத்தை சேர்ந்த டி.மனோகரன் என்பவர் அபகரித்து மோசடி செய்து இருப்பதாகவும், இதில் மனோகரனின் மனைவி சேரன்குளம் ஊராட்சித் தலைவர் அமுதா உள்ளிட்ட 10 பேருக்கு தொடர்பு இருப்பதாக தெரிவித்திருந்ததுடன் இது குறித்து 2017 ஆம் ஆண்டு திருவாருர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்து வழக்கு பதிவு செய்ய்பட்டும் இது நாள் வரை மேல் நடவடிக்கை எடுக்கப்படாமல் இருப்பதாகவும், இந்த வழக்கினை சிபிசிஐடி பிரிவுக்கு மாற்ற வேண்டும் என தெரிவித்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த ஏப்ரல் 27 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி இந்த வழக்கை சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றுவதாகவும், இதனை விசாரித்து 3 மாத காலத்திற்குள் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இதையும் படிக்க | தமிழகத்தில் சுங்கக் கட்டணம் உயர்வு அமலுக்கு வந்தது!
சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்திய மன்னார்குடியில் கனகாம்பாள் கோயில் தெருவில் உள்ள ஒன்றிய குழுத் தலைவர் டி. மனோகரனின் வீடு.
இந்தநிலையில்,வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு சிபிசிஐடி காவல் துணைக் கண்காணிப்பாளர் அருளரசன் தலைமையில் 10 மேற்பட்ட போலீசார், மன்னார்குடி கனகம்பாள் கோயில் தெருவில் உள்ள டி.மனோகரன் வீட்டிற்கு வந்து சோதனையில் ஈடுப்பட்டனர். 2 மணி நேரம் நடைபெற்ற சோதனைக்கு பின் 9 மணி அளவில் சோதனையினை முடித்துக்கொண்டு சிபிசிஐடி போலீசார் அங்கிருந்து வெளியேறினர். இந்த சோதனையில் எந்த ஆவணமும் கைப்பற்றபடவில்லை என தெரிய வந்தது.
அங்கிருந்து புறப்பட்ட சிபிசிஐடி போலீசார், மன்னார்குடி பெரியகம்மாளத் தெருவில் உள்ள டி.மனோகரனின் கட்டுமானத் தொழில் சார்ந்த அலுவலகத்தில் காலை 9.30 மணி முதல் சோதனையில் ஈடுப்பட்ட வருகின்றனர்.
இது குறித்து செய்தி பரவியதும் மனோகரனின் வீடு மற்றும் அலுவலகப் பகுதியில் அதிமுகவினரும் அவரது ஆதரவாளர்களும் அதிக எண்ணிக்கையில் திரண்டனர். இதனால், மன்னார்குடியில் வெள்ளிக்கிழமை காலை முதல் பரபரப்பாக காணப்படுகிறது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...