
அவிநாசி: அவிநாசி அருகே ராயங்கோயில் பகுதியில் வாலிபர் வியாழக்கிழமை கத்தியால் கழுத்து அறுத்துக் கொலை செய்யப்பட்டார்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி ராயங்கோயில் காலனி பகுதியில் வசித்து வருபவர் தென்காசியைச் சேர்ந்த லட்சுமணன்(35). இவரது மனைவி கங்கா. இவர்களது மகன் அருண்குமார் (16), மகள் ஜோதி.
திருச்சி பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் மகன் யுவராஜ்(32) மற்றும் லட்சுமணன் இருவரும் குடிநீர் கேன் விநியோகிக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தனர்.

மேலும் லட்சுமணன் குடியிருக்கும் வீட்டிற்கும் அருகிலேயே, வள்ளியம்மாள் என்பவருக்குச் சொந்தமான வாடகை வீட்டில் கடந்த சில நாள்களாக யுவராஜ் தனியாக வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், வாடகை வீட்டில் வசித்து வந்த யுவராஜ், வியாழக்கிழமை நீண்ட நேரமாகியும் கதவு திறக்காததால் வீட்டின் உரிமையாளர் வள்ளியம்மாள் வந்து பார்த்தபோது, கத்தியால் கழுத்து அறுத்த நிலையில் யுவராஜ் உயிரிழந்து கிடந்துள்ளார்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அவிநாசி போலீசார் யுவராஜின் உடலை கைப்பற்றியதுடன் கொலை செய்யப்பட்டதற்கான காரணம், கொலை செய்தவர்கள் யார், முன்விரோதமா என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...