உதயநிதி என்ன சொல்ல வருகிறார்? எக்ஸில் கொசுவத்தி!

தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கொசுவத்தி சுருள் படத்தை பகிர்ந்திருக்கிறார்.
க்ஸ் பக்கத்தில் பகிரப்பட்ட கொசுவத்தி!
க்ஸ் பக்கத்தில் பகிரப்பட்ட கொசுவத்தி!


சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்ற பேச்சு ஏற்படுத்திய சர்ச்சை இன்னும் ஓயாத நிலையில், தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கொசுவத்தி சுருள் படத்தை பகிர்ந்திருக்கிறார்.

எந்த விளக்கமும், பதிவும் இன்றி, வெறும் கொசுவத்தி சுருள் படத்தை உதயநிதி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. இதற்கு பலரும் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து வருகிறார்கள். இதனால், கொசுவத்தி சுருள் இன்று எக்ஸ் பக்கத்தில் அதிகம் டிரெண்ட் ஆகிவருகிறது.

சனாதன தர்மம் குறித்து உதயநிதியின் பேச்சு, பல மாநிலத்தின் முக்கிய தலைவர்களை எல்லாம் கருத்தும், விமர்சனமும் சொல்ல வைத்ததோடு, அளவோடு எதிர்வினையாற்றுங்கள் என்று பிரதமர் மோடியே, மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் வலியுறுத்தியிருந்ததாகக் கூட ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

இந்த அளவுக்கு, சனாதனக் கருத்து மிகப்பெரிய சர்ச்சைப் போரை ஏற்படுத்தியிருந்தது. இதற்குக் காரணம், செப்டம்பர் முதல் வாரத்தில் சென்னையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றது.

இந்த மாநாட்டில் அமைச்சர் உதயநிதி கலந்து கொண்டு பேசுகையில், சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும். எதிர்க்க முடியாது. கொசு, டெங்கு, மலேரியா, கரோனா போன்றவற்றை எதிர்க்கக் கூடாது, ஒழித்துக்கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனமும். சனாதனம் என்பதை எதிர்ப்பதைவிட ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியமாகும் என்றார்.

அவர் பேசிய இந்தப் பேச்சுதான், சனாதன தர்மம் என்ற வார்த்தையை பட்டிதொட்டியெங்கும் பரவச் செய்தது. இதற்கு ஆதரவாக சிலரும், எதிர்த்து பலரும் ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும், சிலர் நேரடியாக நீதிமன்றத்துக்கே சென்று உதயநிதி மீது வழக்குத் தொடர்ந்தும் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்திருந்தனர்.

இந்த நிலையில், பிரதமர் அமைச்சர்களுக்கு அளவோடு எதிர்வினையாற்றுங்கள் என்று கூறியதாக வந்தச் செய்திக்கு, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது பதிலை வெளியிட்டிருந்தார்.

அதில், மணிப்பூர் பற்றியோ - சி.ஏ.ஜி அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள ரூ.7.50 லட்சம் கோடி மதிப்பிலான முறைகேடுகள் பற்றியோ பிரதமரும் - மத்திய அமைச்சர்களும் இன்னும் வாயே திறக்கவில்லை. ஆனால் சனாதனத்தைப் பற்றி பேசியவுடன், மத்திய அமைச்சரவையே கூடி இருக்கிறது என்றால், இவர்கள்தான் பிற்படுத்தபட்ட-பட்டியலின- பழங்குடியின மக்களைக் காப்பற்றப் போகிறார்களா? பெண்ணினத்தை முன்னேற்றப் போகிறார்களா? அதனால்தான் நேற்று அம்பேத்கரின் பேரன் பிராகாஷ் அம்பேத்கர் கூட, ”தீண்டாமையை ஆதரிக்கும் சனாதனத்தை எப்படி நாம் ஏற்றுக்கொள்ள முடியும்” எனக் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு பிரதமர் பதில் என்ன என்று ஸ்டாலின் கேட்டிருந்தார்.

ஒரு மாநில முதல்வரே, பிரதமருக்கு கேள்வி எழுப்பும் அளவுக்கு சனாதன தர்மம் குறித்தப் பேச்சு சர்ச்சைப் போராக வெடித்த நிலையில், தமிழகத்தில் ஆங்காங்கே டெங்கு காய்ச்சலும் வேகமாகப் பரவி வருகிறது.

தென்மேற்குப் பருவமழை காரணமாக, கொசு அதிகரித்து, கொசுவால் பரவும் நோய்களும் மக்களுக்குப் பரவி வருகிறது. இதனிடையே கேரள எல்லையையொட்டியிருக்கும் மாநிலங்களில் டெங்கு பரவல் அதிகரித்துள்ளது. சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களிலும் கூட நூற்றுக்கணக்கானோர் டெங்கு காய்ச்சலால் அவதிப்பட்டு வருகிறார்கள்.

சென்னையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் மதுரவாயலைச் சேர்ந்த 4 வயது சிறுவன் சனிக்கிழமை உயிரிழந்தார். மதுரவாயல் பகுதியில் சுகாதாரப் பணிகள் முறையாக நடைபெறாததே டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிறுவன் உயிரிழக்க காரணம் எனக் கூறி பெற்றோரும், அப்பகுதி மக்களும் குற்றம் சாட்டியிருந்தனர்.

அந்த பகுதியில் மூன்று நாள்களுக்கு ஒருமுறை குடிநீா் விநியோகம் செய்யப்படுவதால் கேன்களில் தண்ணீரை சேமித்து வைத்து பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளதாகவும், கடந்த சில தினங்களாக பெய்த மழையால் சாலைகளில் தண்ணீா் தேங்கியிருப்பதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டியிருந்தனர்.

எனவே, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் கொசுவர்த்தி சுருள் படம், சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்ற சர்ச்சையை சுட்டிக்காட்டுகிறதா? அல்லது சென்னையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறதா? என்ற எண்ணற்றக் கேள்விகளையும் சந்தேகங்களயும் எழுப்பியுள்ளது.

மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வந்த ஜி20 உச்சி மாநாடு நேற்று நிறைவடைந்த நிலையில், வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை, உதயநிதியின் கொசுவர்த்தி சுருள் எக்ஸ் பக்கத்தில் டிரெண்டிங் ஆகி வருகிறது.

பதில் விரைவில் எதிர்பார்க்கலாம்..

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com