அமைச்சர் பொன்முடி வழக்கில் டி.ஜெயக்குமார் ஆஜர் 

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் விழுப்புரம் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்காக ஆஜரானார்.
அமைச்சர் பொன்முடி வழக்கில் டி.ஜெயக்குமார் ஆஜர் 

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் விழுப்புரம் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்காக ஆஜரானார்.

தமிழகத்தில் கடந்த 2006 முதல் 2011ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சிக்காலத்தில் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த க.பொன்முடி, கூடுதலாக கனிமவளத்துறையையும் கவனித்து வந்தார். இந்த ஆட்சிக்காலத்தில் விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், பூத்துறை கிராமத்திலுள்ள செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்ததன் மூலம் அரசுக்கு ரூ.28.36 கோடி வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டது.

இதுதொடர்பாக அமைச்சர் க.பொன்முடி, அவரது மகனும், கள்ளக்குறிச்சி எம்.பியுமான பொன்.கெளதம சிகாமணி, ராஜமகேந்திரன், சதானந்தன், கோதகுமார், ஜெயச்சந்திரன், கோபிநாத், லோகநாதன் ஆகிய 8 பேர் மீது விழுப்புரம் குற்றப்பிரிவு போலீஸார் கடந்த 2012-ஆம் ஆண்டில் வழக்குத் தொடுத்தனர். இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. வழக்கு விசாரணையின் போது லோகநாதன் இறந்து விட்டார்.

இந்த வழக்கில் அரசுத் தரப்பு சாட்சிகளாக மொத்தம் 67 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து செப்டம்பர் 7-ஆம் தேதி வரை மொத்தம் 11 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. ஓய்வு பெற்ற வட்டாட்சியர், நில அளவைத்துறை முன்னாள் துணை ஆய்வாளர், கனிமவளத்துறை முன்னாள் துணை இயக்குநர் என 9 பேர் அரசுத் தரப்பு பாதகமாக பிறழ் சாட்சியமளித்தனர்.  இருவர் மட்டுமே முறையான சாட்சியங்களைப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் அரசுத் தரப்பு சாட்சிகளாக சேர்க்கப்பட்டவர்கள் தொடர்ந்து பிறழ் சாட்சியமாக மாறி வருவதால், வழக்கு விசாரணைக்கு உதவும் வகையில் தங்களையும் அனுமதிக்கக் கோரி முன்னாள் அதிமுக அமைச்சர் டி.ஜெயக்குமார் சார்பில், விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் முன்னாள் அரசு வழக்குரைஞர் சீனிவாசன் செப்டம்பர்8-ஆம் தேதி மனுவைத் தாக்கல் செய்தார். இந்த மனு விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் செப்டம்பர் 12 -ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுவை ஏற்றுக் கொண்ட முதன்மை மாவட்ட நீதிபதி ஆர். பூர்ணிமா, முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செப்டம்பர் 25-ஆம் தேதி விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் திங்கள்கிழமை காலை 10.15 மணிக்கு ஆஜரானார். உடன், அதிமுக வழக்குரைஞர்களும் நீதிமன்றத்துக்கு வந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com