இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் அனைத்து ரகசியங்களும் அம்பலமாகும்: முதல்வர் ஸ்டாலின்

இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் அனைத்து ரகசியங்களும் அம்பலமாகும்: முதல்வர் ஸ்டாலின்

இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் அனைத்து ரகசியங்களும் அம்பலமாகும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சிதம்பரத்தில் இன்று நடைபெற்ற இந்தியா கூட்டணியின் மக்களவைத் தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது, இந்தியாவின் தென்கோடி முனையில் இருக்கும் தி.மு.க. சொல்வதை அகில இந்திய கட்சியான காங்கிரஸ் செய்கிறேன் என்று வாக்குறுதி கொடுக்கிறது! இதுதான் சமூகநீதிக் கூட்டணி! ஏன் என்றால், சமூகநீதி இந்தியாதான் இன்றைய உடனடித் தேவை! அதை அடைய, அமைதியான இந்தியா - வளர்ச்சியை நோக்கிய இந்தியா உருவாக - தமிழ்நாட்டில் தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்! தனிநபர்களாக நீங்கள் வாக்களித்தால் மட்டும் போதாது! மக்களிடம் நீங்கள் சென்று பா.ஜ.க. ஏன் தோற்கடிக்கப்பட வேண்டும் என்று எடுத்துச் சொல்ல வேண்டும்!

பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்து மோடி பிரதமரானால் இந்தியாவில் ஜனநாயகம் இருக்காது! நாடாளுமன்றத்தில் விவாதம் இருக்காது! அரசியலமைப்புச் சட்டம் அடியோடு மாற்றப்படும்! தேர்தல் ஜனநாயகம் குழிதோண்டிப் புதைக்கப்படும்! மாநில அரசுகள் முனிசிபாலிட்டிகளாக மாற்றப்படும்! ஆளுநர்களை வைத்துப் போட்டி அரசாங்கம் நடத்தப்படும்! நாடெங்கும் மதவெறி தலைவிரித்தாடும்! மதக்கலவரத்தில் ஈடுபடுகிறவர்களைத் தேசத்தியாகிகளாகப் போற்றுவார்கள்! அனைத்து மக்களும் சகோதர – சகோதரிகளாக வாழ்கிறோமே - அப்படிப்பட்ட நம்மைப் பிளவுப்படுத்துவார்கள்! வேற்றுமைகளும் - அடிமைத்தனமும் நிறைந்த சமூகத்தை மீண்டும் உருவாக்குவார்கள்! நம்முடைய குழந்தைகளின் படிப்பைப் பறிப்பார்கள்! மக்களைச் சிந்திக்க விடமாட்டார்கள்! பொய்களையே வரலாறாக எழுதுவார்கள்! இஸ்லாமிய – கிறிஸ்துவ மக்களை இரண்டாம்தர குடிமக்களாக மாற்றி – அவர்களுக்கு எதிராக வெறுப்பை விதைப்பார்கள்.

ஒரே நாடு – ஒரே கலாச்சாரம் – ஒரே மொழி – ஒரே மதம் – ஒரே தேர்தல் – ஒரே ரேஷன் கார்டு – ஒரே உணவு – ஒரே அரசு – ஒரே கட்சி – ஒரே தலைவர் என்று ஒரே ஒரே என்று ஒரேடியாக நாட்டை நாசமாக்கிவிடுவார்கள்! பா.ஜ.க.வின் திட்டங்கள் மிக மிக மோசமானது! அதைவிட ஆபத்தானது… மறுபடியும் நம்முடைய தமிழ்நாட்டின் மீது மாபெரும் பண்பாட்டுத் தாக்குதல் நடத்துவார்கள்... ஆட்சி நடத்துவது தில்லியா? இல்லை, நாக்பூரா? என்று சந்தேகம் வந்துவிடும்! பதவியில் இருக்கிறவர் பிரதமரா? இல்லை, ஆர்.எஸ்.எஸ். தலைவரா? என்று நினைக்கும் அளவுக்கு நிலைமை மோசமாகிவிடும்! இந்த ஆபத்தை மக்கள் உணர்ந்திடக் கூடாது என்றுதான் ஊழல் – குடும்ப அரசியல் - இப்போது கச்சத்தீவு என்று திசைதிருப்புகிறார்.

பிரதமர் மோடி இப்போது அடிக்கடி சொல்கிறாரே, கேரண்டி… கேரண்டி என்று, அது எதற்குத் தெரியுமா? அவர் ஒரு வாஷிங் மிஷின் வாங்கியிருக்கிறார்! ”Made by BJP” அந்த வாஷிங் மிஷின் மூலமாக, ஊழல் செய்த அரசியல்வாதிகள் பா.ஜ.கவுக்குள் சென்றால், மீண்டும் வரும்போது, ஊழல் கறை எல்லாம் சென்று, வழக்கு எல்லாம் வாபஸ் ஆகி, தூய்மை ஆகிவிடுவார்கள்! அதற்குதான் மோடி கேரண்டி கேரண்டி என்று சொல்கிறார்?

பத்தாண்டு ஆட்சியில், பா.ஜ.க. ஊழல்கள் ஒன்றா - இரண்டா! அதற்கு, இமாலய எடுத்துக்காட்டுதான். உலக நாடுகள் மத்தியில், இந்திய ஜனநாயகத்திற்கே அழிக்க முடியாத அவமானத்தை ஏற்படுத்தியிருக்கும் தேர்தல் பத்திர ஊழல்! கடந்த 5 ஆண்டுகளில் E.D. – I.T. – C.B.I. இவர்கள் கூட்டணி அமைப்புகள் மூலமாக ரெய்டுக்கு அனுப்புவது, அதற்குப் பிறகு பா.ஜ.க.வுக்கு நிதியாகத் தேர்தல் பத்திரங்களாக வாங்குவது என்று, 8 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்திருக்கிறார்கள். வரலாற்றிலேயே இப்படி ஒரு மெகா வசூல் நடந்ததில்லை!

அதுமட்டுமா, சி.ஏ.ஜி அறிக்கை வந்ததே! 7 லட்சம் கோடி ரூபாய்க்கு முறைகேடு நடந்திருப்பதாக சி.ஏ.ஜி. ஆதாரத்தோடு அறிக்கை வெளியிட்டது! அந்த அறிக்கை பற்றி, ஒன்றிய அரசு, வாயையே திறக்கவில்லை!

தேர்தல் பத்திரம் போன்று மற்றொரு நிதியும் வசூல் செய்திருக்கிறார்! அதுவும் ‘பி.எம். கேர்ஸ் ஃபண்ட்’ என்று பெயர் வைத்து வசூல் செய்திருக்கிறார்! இப்படி எல்லா ரகசியங்களும் ஜூன் மாதம் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும், அம்பலமாகும்! அதேபோன்று, ரஃபேல் ஊழல் ரகசியமும் நிச்சயமாக வெளியே வரும்!

அதனால், பிரதமர் மோடியின் திசைதிருப்பும் நாடகத்தை மக்கள் நம்புவதற்குத் தயாராக இல்லை! மக்களின் நம்பிக்கை இந்தியா கூட்டணி மீதுதான் இருக்கிறது! என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com