புதுச்சேரியில் மின் ஊழியர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிட்டது: முதல்வர் ஸ்டாலின்

புதுச்சேரியில் மின் ஊழியர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிட்டது: முதல்வர் ஸ்டாலின்

புதுச்சேரியில் மின் ஊழியர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிட்டது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் இந்தியா கூட்டணியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் இன்று பேசியதாவது, கடந்த பத்தாண்டுகால மோடி ஆட்சியில் புதுச்சேரி இழைக்கப்பட்ட அநீதிகள்தான் அதிகம்! மின்சாரத்துறையைத் தனியாருக்குத் தாரை வார்க்கும் சதித் திட்டம் தீட்டப்பட்டிருக்கிறது. மின் ஊழியர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிட்டது. மின் கட்டணம் கேட்டாலே ஷாக் அடிக்கிறது! புதுச்சேரியில் ஒவ்வொரு நாளும் துணைநிலை ஆளுநர்களை வைத்து, அரசியல் கூத்துகளை அரங்கேற்றிக் கொண்டு இருந்தார்கள். கிரண் பேடி காமெடிகள் முடிந்த பிறகு, சகோதரி தமிழிசை வந்தார்கள். புதுச்சேரியில் உட்கார்ந்து கொண்டு, தமிழ்நாட்டு அரசியலைப் பேசிக் கொண்டு இருந்தார்கள். தேர்தல் வந்ததும் பா.ஜ.க.விற்கே மீண்டும் சென்றுவிட்டார்கள்! புதுச்சேரி வரலாற்றில் ராஜ் நிவாஸ் வாசலிலே, முதல்வராக இருந்த நாராயணசாமி அவர்கள் அமர்ந்து போராட்டம் நடத்தினார். இதுதான் புதுச்சேரிக்கு பா.ஜ.க. செய்த சாதனை!

இங்கு வாக்கு கேட்டு வந்த பிரதமர் மோடி என்ன கூறினார். “பெஸ்ட் புதுச்சேரி“. தொழில் – சுற்றுலா – கல்வி போன்றவற்றில் புதுச்சேரியை பெஸ்ட் ஆக்குவோம் என்று சொன்னாரே – செய்தாரா? காங்கிரஸ் அரசிடம் ஏதோ ரிப்போர்ட் கார்டெல்லாம் கேட்டாரே – பத்தாண்டுகால பா.ஜ.க. ஆட்சி ரிப்போர்ட் கார்டு எங்கே? வாட்ஸ்அப் யூனிவர்சிட்டி ரிப்போர்ட் கார்டு வேண்டாம். நாங்கள் கேட்பது, ஒரிஜினல் ரிப்போர்ட் கார்டு! நாராயணசாமி கட்சி மேலிடத்தைக் கேட்டு நடக்கிறார் என்று குறை கூறினார். ஆனால், இப்போது வேறு கட்சியை சேர்ந்த முதலமைச்சர் ரங்கசாமியைத் தங்களின் பேச்சைக் கேட்கச் சொல்லி என்ன பாடு படுத்துகிறார்கள்? அன்றைக்கு முதல்வராக இருந்த நாராயணசாமிக்குப் போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை என்று ஏதோ பெரிதாக ஆதங்கப்பட்டுப் பேசினீர்களே.

இன்றைக்குப் புதுச்சேரியில் முதலமைச்சராக இருப்பது யார்? ரங்கசாமி! உங்கள் கூட்டணியில் எது பெரிய கட்சி? ரங்கசாமியின் கட்சி! புதுச்சேரியில் எத்தனை நாடாளுமன்றத் தொகுதி இருக்கிறது? ஒரே ஒரு தொகுதி! அதிலும் பா.ஜ.க.தான் போட்டியிடும் என்று அவர் வாயாலேயே சொல்ல வைத்தீர்கள். ரங்கசாமி தனிக்கட்சி ஆரம்பிக்கக் காரணமே நமசிவாயம்தான்! இப்போது அந்த நமசிவாயத்திற்கு ஓட்டு கேட்டு வரும் நிலைமையை ரங்கசாமிக்கு உருவாக்கி, அந்தக் கட்சியையும் உங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதுதான் ஜனநாயகமா? உள்துறை அமைச்சராக சும்மா உட்கார்ந்துக்கொண்டு இருந்தவரை, தேர்தலில் நிறுத்தியிருக்கிறார்கள். நமசிவாயம் எத்தனை கட்சி மாறி இருக்கிறார் என்ற வாங்கிப் பார்த்தப்போது எனக்கே தலைசுற்றியது. தி.மு.க.வில் இருந்த நமசிவாயம் – ம.தி.மு.க.வுக்குத் தாவினார். ம.தி.மு.க.-இல் இருந்து த.மா.கா.வுக்குத் தாவினார். த.மா.கா.வில் இருந்து புதுவை மாநில காங்கிரசுக்கு தாவினார். புதுவை மாநில காங்கிரசில் இருந்து மீண்டும் த.மா.கா.வுக்குத் தாவினார். த.மா.கா.வில் இருந்து காங்கிரசுக்குத் தாவினார். காங்கிரசில் இருந்து பா.ஜ.க.வுக்கு தாவினார். இன்னும் இரண்டு மாதம் கழித்து நான் வந்தால் அவர் எந்தக் கட்சியில் இருப்பாரோ? யாமறியேன் பராபரமே. அது நமசிவாயத்திற்கே தெரியாது.

பா.ஜ.க.வால் புதுச்சேரி அடைந்த நன்மை என்ன? “நான் ஆட்சிக்கு வந்தால், ஒரு மீனவர் கூட தாக்கப்பட மாட்டார் – கைது செய்யப்பட மாட்டார்” என்று வீரவசனம் பேசினாரே பிரதமர் மோடி. ஆனால், இலங்கைக் கடற்படையினரால் கரைக்கால் மீனவர்கள் கைது செய்யப்படுவதைத் தடுத்தாரா? படகுகள் பறிமுதல் செய்யப்படுவதைத் தடுக்க முடிந்ததா? அவர் விஷ்வகுரு இல்லை, மவுனகுரு!

அதுமட்டுமல்ல, பா.ஜ.க. கூட்டணி ஆட்சியில் சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது! அதற்கு சமீபத்திய எடுத்துக்காட்டு, விளையாடிக் கொண்டிருந்த சிறுமி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்முறைக்கு ஆளாகி, கொலை செய்யப்பட்ட படுபாதகச் செயல்! நாடே அந்தச் செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைந்ததே! பா.ஜ.க. கூட்டணி ஆட்சியில், பெண் குழந்தைகளுக்குப் பாதுகாப்பில்லாத சூழல்தான் நிலவுகிறது! இந்தியா முழுவதும் பெண்கள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு பா.ஜ.க. ஆட்சியில் கேள்விக்குறியாக இருக்கிறது! ரங்கசாமியை டம்மியாக உட்கார வைத்துவிட்டு, பா.ஜ.க. பம்மாத்து ஆட்சியை இங்கு நடத்திக்கொண்டு இருக்கிறது.

புதுச்சேரிக்கு ஒரு சட்டமன்றம் கட்டும் உரிமைகூட இல்லை. புதுச்சேரியில் ரேஷன் கடைகள் இருக்கிறதா? ஏழைகளின் வயிற்றில் அடித்திருக்கிறது, ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ் – பா.ஜ.க. கூட்டணி ஆட்சி, பட்டியல் இனத்து மக்களுக்கான சிறப்புக் கூறு நிதி அவர்களுக்காக உண்மையாகவே செலவிடப்பட்டிருக்கிறதா? பல்வேறு பொதுத்துறை நிறுவனங்கள் இங்கே மூடப்பட்டிருக்கிறது. கூட்டுறவு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் வேலை செய்த ஊழியர்களின் குடும்பங்கள் நடுரோட்டிற்கு வந்துவிட்டார்கள். தேர்தல் வந்தால்தான் ரங்கசாமிக்கு மாநில அந்தஸ்து என்ற ஞானோதயம் வரும். கடந்த 3 ஆண்டுகளாக அதற்காக என்ன நடவடிக்கை எடுத்தார்கள் இவர்கள்? ஒன்றியத்திலும், மாநிலத்திலும் ஒரே கட்சி – ஒரே கூட்டணிக் கட்சிகள் ஆட்சிக்கு வந்தால், தேனாறும் பாலாறும் ஓடும் என்று சொன்னார்ளே? புதுச்சேரியில் ஓடியதா?

புதுச்சேரி மக்கள் போராடிப் பெற்ற விடுதலையை, மக்களின் உரிமையை ஒன்றிய மோடி அரசு பறிக்க விட்டு, வேடிக்கை பார்த்த ரங்கசாமி, இப்போது எந்த முகத்துடன் பா.ஜ.க.வுக்காக வாக்குகள் கேட்டு வருகிறார்?. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com