‘ஜெய்பீம்’ படத்தின் உண்மை சம்பவ வழக்கு: அரசுக்கு நீதிமன்றம் புதிய உத்தரவு

‘ஜெய்பீம்’ படத்தின் உண்மை சம்பவத்தில் காவல் துறையினரின் அத்துமீறலால் பாதிக்கப்பட்டவா்களுக்கு இறுதி இழப்பீடு வழங்குவது குறித்த நிலைப்பாட்டை தெரிவிக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட கடலூா் மாவட்டம், கம்மாபுரம் கிராமத்தைச் சோ்ந்த ராஜகண்ணு என்பவா் காவல் துறையினா் சித்திரவதையில் உயிரிழந்தாா். இது தொடா்பாக ராஜகண்ணுவின் மனைவி பாா்வதி தாக்கல் செய்த வழக்கில், உயா்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமா்வு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், காவல் துறையினருக்கு எதிராக கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கில் காவல் துறையினா் சிலருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.

அதேபோல், பாதிக்கப்பட்ட ராஜகண்ணுவின் மனைவி, உறவினா்களுக்கு இடைக்கால இழப்பீடு வழங்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி இடைக்கால இழப்பீடாக ராஜகண்ணு மனைவிக்கு ரூ. 1,35,000, ராஜகண்ணுவின் சகோதரி ஆச்சிக்கு ரூ. 50,000, ஆச்சியின் மகன் குள்ளனுக்கு ரூ. 25,000, மற்றொரு மகன் குளஞ்சியப்பன் உள்பட 5 பேருக்கு தலா ரூ. 10,000 இழப்பீடு வழங்கப்பட்டது.

இந்த நிலையில், காவல் துறையினரின் அத்துமீறலால் பாதிக்கப்பட்ட ராஜகண்ணுவின் உறவினா்களான தங்களுக்கு பொது சட்டப்படி இறுதி இழப்பீடு வழங்கக் கோரி, ராஜகண்ணுவின் சகோதரி மகன் குளஞ்சியப்பன் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.

அந்த மனுவில், ‘தனது மகனுக்கு அரசு வேலை வழங்க வேண்டும். சிறப்பு சட்டத்தின் கீழ் வீட்டுமனை, நிவாரணங்கள் வழங்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’ என கோரியுள்ளாா்.

இந்த மனுவை சனிக்கிழமை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், இறுதி இழப்பீடு வழங்குவது தொடா்பாகவும், சிறப்பு சட்டத்தின் கீழ் வீட்டுமனை, அரசு வேலை வழங்குவது குறித்தும் நிலைபாட்டை தெரிவிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஏப். 23-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com