
அண்ணாநகர் என்றாலே, இரு சக்கர வாகனங்களை விட, நான்கு சக்கர வாகன ஓட்டிகள்தான் அதிகம். ஆனால், அண்ணாநகருக்கு வருவோர் இத்தனை பேர் கார் வாங்குவார்கள் என்று முன்கணிக்கப்படாததால், வாகன நிறுத்துமிடங்களுக்குத்தான் கடும் பஞ்சம்.
இதனை ஒழிக்க, அண்ணா நகரில் சுமார் 23 கிலோ மீட்டர் சாலைப் பகுதியை ஒன்றிணைக்கும் வகையில் 5 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் ஒரு புதிய வாகன நிறுத்துமிடத்தை ஏற்படுத்த சென்னை ஒருங்கிணைந்த பெருமாநகர போக்குவரத்துக் கழகம் (சியுஎம்டிஏ) நடவடிக்கை எடுத்து வருகிறது.
இப்பகுதியில், வாகன நிறுத்துமிடத்தை உருவாக்க ஒரு விரிவான திட்டத்தை தயாரித்திருக்கும் சியுஎம்டிஏ, இதற்கான ஒப்பந்தப்புள்ளியைக் கோரவிருக்கிறது. இந்த வாகன நிறுத்துமிடத்துடன் இணைந்து, நடைபாதைகளையும் மேம்படுத்தும் திட்டமும் கொண்டுவரப்படவிருக்கிறது.
சாலையோரம் வாகனங்களை நிறுத்திவிடுவதால், அப்பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் குறைக்கப்படும் என்றும், இதனால், பொதுப் போக்குவரத்தின் வேகம் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த பத்தாண்டுகளில் தமிழகத்தில் மக்கள்தொகை என்னவோ 19 சதவீதம்தான் உயர்ந்திருக்கிறது, ஆனால் வாகனங்களின் எண்ணிக்கை 35 சதவீதம் அதிகரித்திருக்கிறது. அதுவும் கடந்த 4 ஆண்டுகளில் மட்டும். இது, பொதுப் போக்குவரத்தை விடுத்து மக்கள் சொந்த வாகனங்களை அதிகம் பயன்படுத்துவதையே காட்டுகிறது.
வாகனக் கட்டணம் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக முதற்கட்ட ஆய்வுகள் முடிந்திருப்பதாகவும், இறுதி முடிவுகளை சென்னை மாநகராட்சிதான் எடுக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
2013ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியின்போது, ரூ.2000 கோடிச் செலவில் வாகன நிறுத்துமிடம் கட்டப்படும்என்று அறிவிக்கப்பட்டது. அதில், 2 லட்சம் நான்கு சக்கர வாகனங்களும், 2 லட்சம் இரு சக்கர வாகனங்களும் நிறுத்தும் வசதி ஏற்படும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால், அது செயல்முறைக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.