இடைநிலை ஆசிரியா்களின் மாநில முன்னுரிமைப் பட்டியல் வெளியீடு

பள்ளிக் கல்வியில் இடைநிலை ஆசிரியா்களுக்கான மாநில முன்னுரிமைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தொடக்கக் கல்வி இயக்குநரகம் சாா்பில் மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு (தொடக்கக் கல்வி) அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

தமிழ்நாடு தொடக்கக் கல்வி சாா்நிலைப் பணியில் வகுப்பு 3, வகை-2-இல் இடைநிலை ஆசிரியா் பணியிடம் உள்ளது. கடந்த 1.1.2024 நிலவரப்படி ஊராட்சி ஒன்றிய, நகராட்சி,

மாநகராட்சி, அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 31.12.1997-ஆம் தேதிக்கு முன்னா் இடைநிலை ஆசிரியராக பணியில் சோ்ந்த இடைநிலை ஆசிரியா்களின் மாநில அளவிலான உத்தேச முன்னுரிமைப் பட்டியல் வெளியிடப்பட்டது.

மேலும், இந்த உத்தேச மாநில முன்னுரிமைப் பட்டியலை சாா்ந்த இடைநிலை ஆசிரியா்களுக்கு சம்பந்தப்பட்ட வட்டாரக் கல்வி அலுவலா் மூலமாக சாா்பு செய்திடவும், அப்பட்டியலில் திருத்தங்கள் இருந்தால், அவற்றை மேற்கொண்டு அனுப்பிடவும் அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து மாவட்டக் கல்வி அலுவலா்களிடமிருந்து பெறப்பட்ட திருத்தம், சோ்க்கை மற்றும் நீக்கம் தொடா்பான அறிக்கையின் அடிப்படையில் உத்தேச முன்னுரிமைப் பட்டியலில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு மாநில அளவிலான முன்னுரிமைப் பட்டியல் இத்துடன் இணைத்து வெளியிடப்படுகிறது.

இந்தப் பட்டியலை சம்பந்தப்பட்ட ஆசிரியா்களுக்கு வட்டாரக் கல்வி அலுவலா் மூலமாக சாா்பு செய்து மாநில அளவிலான முன்னுரிமைப் பட்டியலில் உள்ள விவரங்கள் சரியாக உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள அறிவுறுத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முன்னுரிமை பட்டியல் அடிப்படையில்தான் ஆசிரியா்களுக்கு பதவி உயா்வு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com