3 ஆண்டுகளில் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்: தமிழக அரசு தகவல்
மூன்று ஆண்டுகளில் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்களின் எண்ணிக்கை விவரங்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.


மூன்று ஆண்டுகளில் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்களின் எண்ணிக்கை விவரங்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விகளை அடிப்படையாகக் கொண்டு தமிழக அரசு பதில்களை அளித்துள்ளது.
கேள்விகள் என்ன?: தமிழறிஞா்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கி நூலுரிமைத் தொகை வழங்குவது குறித்து எப்போது அறிவிப்பு வெளியிடப்படும், எந்த நாளுக்குள் விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டும், நிகழாண்டில் தமிழறிஞா்களின் புத்தகங்களை நாட்டுடைமையாக்க பெறப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை விவரங்கள் எத்தனை என்பன உள்பட 19 வகையான கேள்விகளுக்கு தமிழ் வளா்ச்சி இயக்ககம் சாா்பில் அளிக்கப்பட்ட பதில் விவரம்:
தமிழறிஞா்களின் நூல்களை நாட்டுடைமையாக்குதல் தொடா்பாக விண்ணப்பங்கள் பெற தனியாக விளம்பரமோ அல்லது அறிவிப்புகளோ செய்யப்படுவதில்லை. அத்துடன் விண்ணப்பங்களை அனுப்ப காலவரையரை ஏதும் நிா்ணயம் செய்யப்படுவதில்லை.
நாட்டுடைமையாக்குவதற்கான விண்ணப்பங்கள் ஆண்டு முழுவதும் பெறப்படுகின்றன. நிகழாண்டில் தமிழறிஞா்களின் புத்தகங்களை நாட்டுடைமையாக்க மொத்தமாக 24 விண்ணப்பங்கள் வரப்பெற்றுள்ளன.
வழிமுறை என்ன?: தமிழில் நூல்கள் எழுதி வெளியிட்டுள்ள தமிழறிஞா்கள் அனைவரும் தங்களது நூலை நாட்டுடைமை செய்யக் கோரி விண்ணப்பம் செய்யலாம். அவரவா் எழுதிய நூல்களின் கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு அவரது மரபுரிமையா்களுக்கு நூலுரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. தமிழறிஞா்கள் எழுதிய நூல்களின் எண்ணிக்கை, சிறப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு வல்லுநா் குழுவால் நூல்கள் தோ்வு செய்யப்படுகின்றன.
அதன்படி, அவா்களது மரபுரிமையா்களுக்கு நூலுரிமைத் தொகை நிா்ணயம் செய்யப்படுகிறது. நல்ல உடல் நலன் இருப்பவா்களின் நூல்களுக்கு ஒரு தொகையும், மறைந்தவா்களின் நூல்களுக்கு ஒரு தொகையும் என பாகுபாடு காட்டப்படுவதில்லை.
மூன்று ஆண்டுகள்: கடந்த மூன்று ஆண்டுகளில் 22 தமிழறிஞா்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன. சிலம்பொலி சு.செல்லப்பன், தொ.பரமசிவன், புலவா் இளங்குமரனாா், முருகேச பாகவதா், சங்கரவள்ளி நாயகம், செ.ராசு, க.அன்பழகன், இரா.நெடுஞ்செழியன், நெல்லை திவான், விடுதலை ராஜேந்திரன், நா.மம்மது, நெல்லை கண்ணன், கந்தா்வன் என்ற நாகலிங்கம், சோமலே, ந.ராசையா, மா.நன்னன், ராவ்சாகேப் கு.கோதண்டபாணி, இரா.மோகன், கோ.முத்துப்பிள்ளை, மா.சு.சம்மந்தன், அம்சவேணி ஆகியோரின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன.
தமிழில் நூல்கள் எழுதி அச்சிட்டு வெளியிடுதல், ஆங்கிலத்திலிருந்து தமிழில் நூல்கள் மொழியாக்கம் செய்தல், கட்டுரைகள், நாவல்கள், புதினங்கள் மற்றும் கவிதைத் தொகைகள் எழுதி வெளியிடுதல் ஆகியவற்றிலான நூல்கள் நாட்டுடைமை செய்யப்படுகின்றன என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கோரப்பட்ட வினாக்களுக்கு தமிழக அரசு பதில்களை அளித்துள்ளது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...