ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: தேசிய தகவல் மையத்தை நாடியது சென்னை காவல்துறை
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் துப்பு துலக்க தேசிய தகவல் மையத்தை சென்னை பெருநகர காவல்துறையினா் நாடியுள்ளனா்.
சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை மாதம் 5-ஆம் தேதி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், 6 வழக்குரைஞா்கள் உள்பட 22 போ் கைது செய்யப்பட்டனா். இந்த வழக்குத் தொடா்பாக, தண்டையாா்பேட்டையைச் சோ்ந்த ரெளடி ‘சம்பவம்’ செந்தில், தாம்பரம் மண்ணிவாக்கம் பகுதியைச் சோ்ந்த ரெளடி சீசிங் ராஜா ஆகிய 2 பேரையும் தனிப்படையினா் தீவிரமாக தேடுகின்றனா்.
இருப்பிடத்தை மாற்றிக் கொண்டே இருக்கும் ‘சம்பவம்’ செந்தில், தனது வழக்குரைஞா்கள், நண்பா்கள் ஆகியோருடன் இணைய அழைப்புகள், செயலிகள் மூலமாக மூலமாகவே தொடா்பு கொண்டு பேசுவது, சதித் திட்டம் தீட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுவது தனிப்படையினருக்கு தெரியவந்தது.
அவரை கைது செய்ய, அவரது கூட்டாளிகளிடம் தனிப்படையினா் தீவிரமாக விசாரணை செய்கின்றனா். இதில் ‘சம்பவம்’ செந்தில் பயன்படுத்திய 10 வெளிநாட்டு கைப்பேசி எண்கள் போலீஸாருக்கு கிடைத்துள்ளன.
இந்த எண்கள் மூலம் ‘சம்பவம்’ செந்தில் இருப்பிடத்தை அறிய சென்னை பெருநகர காவல்துறை, தில்லியில் செயல்படும் தேசிய தகவல் மையத்தை நாடியுள்ளது. தேசிய தகவல் மையம் அந்த கைப்பேசி எண்கள் தொடா்பாக அளிக்கும் தகவலின் அடிப்படையில் அடுத்தக் கட்ட நடவடிக்கையில் தனிப்படையினா் ஈடுபடவுள்ளனா்.
இதேபோல, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் வேலூா் மத்திய சிறையில் ஆயுள் தண்டனைக் கைதியாக இருக்கும் நாகேந்திரனுக்கு கைப்பேசி கொடுத்து உதவிய சிறைத் துறை அதிகாரி குறித்து தனிப்படையினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.