யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

ரூ.42 கோடி செலவில் ஃபார்முலா 4 கார் பந்தயம் தேவையா? எடப்பாடி பழனிசாமி கேள்வி

போக்குவரத்து அதிகம் மிகுந்த நகரின் மையப் பகுதியில் ஃபார்முலா 4 கார் பந்தயம் தேவையா? என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

News image
எடப்பாடி பழனிசாமி(கோப்புப்படம்)
Updated On :11 ஆகஸ்ட் 2024, 10:21 am

DIN

போக்குவரத்து அதிகம் மிகுந்த நகரின் மையப் பகுதியில் ஃபார்முலா 4 கார் பந்தயம் தேவையா? என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

சேலம் மாவட்டம், எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட ஆலச்சம்பாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் மேம்பாட்டு நிதிகளிலிருந்து 72.85 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதியதாக கட்டிமுடிக்கப்பட்ட நான்கு வகுப்பறை கட்டடங்கள், கான்கிரீட் சாலை, போர்வெல் சின்டெக்ஸ் டேங்க் உட்பட முடிவுற்ற பல்வேறு திட்டப்பணிகளை அதிமுக பொதுச்செயலரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி ரிப்பன் வெட்டியும் குத்து விளக்கேற்றியும் இன்று துவக்கி வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. எங்கு பார்த்தாலும் போதைப் பொருள் தங்கு தடையின்றி கிடைக்கிறது. போதைப் பொருள் விற்பனையால் மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் எதிர்காலம் சீரழிந்து வருகிறது. இதைப் பலமுறை தெரிவித்தும் சுட்டிக்காட்டியும் திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. போதைப் பொருள் விற்பனையை தடுக்க முடியாத திறமையற்ற முதல்வராக ஸ்டாலின் இருப்பதால் இளைஞர்களின் எதிர்காலம் வீணாகி வருகிறது.

மக்களின் தேவைகளை நிறைவேற்ற வழியின்றி, கார் பந்தயம் நடத்த திமுக அரசு தயாராகி வருகிறது. கார் பந்தயம் நடத்த இருங்காட்டுக் கோட்டையில் இடம் இருக்கும் போது, அதை விடுத்து விட்டு மக்கள் அதிகம் பயன்படுத்தக் கூடிய போக்குவரத்து நெருக்கடி மிகுந்த சாலைகளின் மக்களின் வரிப்பணத்தில் இருந்து ரூ.42 கோடி செலவில் கார் பந்தயம் நடத்த திமுக அரசு துடிக்கிறது. மக்கள் பணத்தை ஊதாரித்தனமாக செலவிடுகிறார்கள். விளையாட்டுத் துறை அமைச்சர், விளையாட்டுத்தனமாக நடந்து கொள்கிறார். மக்களின் மனதை புரிந்து கொண்டு அதற்கான திட்டங்களை நிறைவேற்ற வேண்டிய அரசாங்கம் ஊதாரித்தனமாக மக்கள் பணத்தை செலவிடுவதை கடுமையாகக் கண்டிக்கிறேன்.

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த திமுக அரசு தவறிவிட்டது. விசைத்தறி தொழில் நசிந்து தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். திமுக ஆட்சியில் அனைத்து தொழில்களும் நசிந்து விட்டது. மக்கள் பணத்தை நலிவடைந்த தொழிலை சீர் செய்யாமல் தேவையின்றி வீணடிக்கிறார்கள். திமுக ஆட்சியில் எடப்பாடி தொகுதியில் எந்த ஒரு திட்டமும் நிறைவேற்றவில்லை.

அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட நல்ல திட்டங்களை திமுக அரசு முடக்கிவிட்டது. ரூ.565 கோடி மதிப்பில் கொண்டு வரப்பட்ட மேட்டூர் அணை உபரிநீரை 100 ஏரிகளுக்கு நிரப்பும் திட்டம், ரூ.1652 மதிப்பில் கொண்டு வரப்பட்ட அத்திக்கடவு அவினாசி திட்டம் என மக்கள் பயன்பெறக்கூடிய நல்ல திட்டங்களை எல்லாம் முடக்கிவிட்டார்கள். முந்தைய ஆட்சியின் நல்ல திட்டங்களை தொடர்வதுதான் நல்ல அரசாங்கமாக இருக்க முடியும். அதிமுக அரசின் திட்டங்களை செயல்படுத்த திமுக ஆட்சியாளர்களுக்கு என்ன மனத்தடை இருக்கிறது. நாங்கள் கட்டிய உக்கடம் பாலத்தை அவர்கள் திறக்கிறார்கள்.

திமுக ஆட்சியில் மின்கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. வீட்டு வரி 120 சதவீதம், சொத்து வரி 180 சதவீதம் உயர்த்தி விட்டு குப்பைக்கும் வரி போட்டு விட்டார்கள் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.