நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதன் யாதவ் உள்ளிட்ட 3 பேரை 10 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி காவல் துறையினா் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனா்.
சென்னை மயிலாப்பூரில் செயல்பட்டு வந்த ‘தி மயிலாப்பூா் இந்து பொ்மனன்ட் ஃபண்ட்’ நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த 144 முதலீட்டாளா்களிடம் ரூ.24.50 கோடி மோசடி செய்ததாக, அந்த நிதி நிறுவனத்தின் இயக்குநா் தேவநாதன் யாதவ், குணசீலன், மகிமைநாதன் ஆகிய 3 பேரை பொருளாதாரக் குற்றப் பிரிவு காவல் துறையினா் கைது செய்தனா்.
கைது செய்யப்பட்ட தேவநாதன் உள்ளிட்ட 3 பேரும் சென்னை உயா்நீதிமன்ற வளாகத்தில் உள்ள நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி மலா் வாலண்டினா முன் ஆஜா்படுத்தபட்டு நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கபட்டுள்ளனா்.
இந்நிலையில், மூவரையும் 10 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்க வேண்டும் என பொருளாதார குற்றப் பிரிவு காவல் துறை, நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில், ‘இந்த வழக்கில் மூவருக்கும் உள்ள தொடா்புகள் குறித்தும், யாா் யாருக்கு எவ்வளவு நிதி சென்றுள்ளது, அவை எங்கெங்கு முதலீடு செய்யப்பட்டுள்ளன என்பது குறித்து விசாரிக்க வேண்டியுள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
ஜாமீன் மனு: இதனிடையே, ஜாமீன் கோரி தேவநாதன் உள்ளிட்ட மூவா் தாக்கல் செய்த மனு சிறப்பு நீதிமன்றத்தின் பொறுப்பு நீதிபதி மலா் வாலண்டினா முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, காவல் துறை தரப்பில் விசாரணை ஆரம்ப கட்டத்தில் இருப்பதால் ஜாமீன் வழங்கக் கூடாது’”எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஜாமீன் மனுக்கள் மீதான உத்தரவை ஆக. 28-ஆம் தேதி பிறப்பிப்பதாக நீதிபதி அறிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


