
தமிழகத்தில் பழிபோடும் விளையாட்டு மட்டுமே நடப்பதாக பாஜக மாநில தலைவர் கே. அண்ணாமலை செவ்வாய்க்கிழமை விமர்சித்துள்ளார்.
ஃபென்ஜால் புயலால் விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டு, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் உள்ள உப்பளத்தை அண்ணாமலை இன்று காலை பார்வையிட்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களுடன் அண்ணாமலை பேசியதாவது:
“ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் வெள்ள பாதிப்புகள் அதிகரித்து வருவதை நாம் அனைவரும் அறிவோம். கடந்தாண்டு சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில், இந்தாண்டு கடலோரப் பகுதிகளிலான நாகப்பட்டினம் வரை பாதிப்பு அதிகமாக உள்ளது.
அதிக உப்பு சாகுபடி நடக்கும் மரக்காணம் பகுதியில் 80 சதவிகித உப்பளங்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. 5,000 பேர் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசை முறையாக தூர்வாரும் பணியை செய்ய வலியுறுத்தினாலும், முறையாக அதனை செய்வதில்லை. அதற்கான முதலீட்டை தமிழக அரசு செய்வதில்லை.
வெள்ளத்தை எதிர்கொள்வதற்கான ஆயத்த பணிகளை மேற்கொள்ளாமல், பழிபோடும் விளையாட்டு மட்டுமே தமிழக அரசு செய்கிறது” என்றார்.
மேலும், ஆய்வு புகைப்படங்களை பகிர்ந்து எக்ஸ் தளத்தில் அண்ணாமலை பதிவிட்டிருப்பதாவது:
“இன்று காலை, ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்டுள்ள, விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியைப் பார்வையிட்டோம். மரக்காணம் பகுதியில் 3,500 ஏக்கர் உப்பளம் மழை நீரில் மூழ்கியுள்ளது. ஒரு நாளைக்கு 300 டன் உப்பு உற்பத்தி செய்யப்படும் இந்தப் பகுதியில், ஆண்டுக்குச் சராசரியாக 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படும். 5000க்கும் மேற்பட்ட உப்பு உற்பத்தியாளர்கள், இந்தப் புயலின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உற்பத்தி செய்யப்படும் உப்பை, அரசு நேரடியாகக் கொள்முதல் செய்ய வேண்டும் என, உற்பத்தியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அவர்களது கோரிக்கையை தமிழக பாஜக முன்னெடுத்துச் செல்லும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.