
விஜய்யுடன் தங்களுக்கு எந்த முரண்பாடும் இல்லை என விசிக தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா தொகுத்துள்ள ‘எல்லோருக்குமான தலைவர் – அம்பேத்கர்’ என்ற நூல் வெளியீட்டு விழா சென்னையில் இன்று (டிசம்பர் 6) நடைபெற உள்ளது.
இந்த விழாவில் விசிக தலைவர் தொல். திருமாவளவன், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் ஆகியோர் பங்கேற்கவிருப்பதாகக் கூறப்பட்டது. இரு தலைவர்களும் ஒரே மேடையில் பங்கேற்பது குறித்து பல விமர்சனங்கள் வந்தன.
இந்நிலையில் விசிக தலைவர் தொல். திருமாவளவன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கப் போவதில்லை என்று விசிக துணைப்பொதுச்செயலாளர் வன்னி அரசு நேற்று அறிக்கை வெளியிட்டார்.
தொல். திருமாவளவனும் தனது சமூக வலைத்தள பக்கத்தில் இதுதொடர்பாக இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுயுள்ளார். 'யாதுமுணர்ந்தே தவிர்த்தோம்! -- பகையின் சூதுமறிந்தே தகர்த்தோம்!' என நீண்ட விளக்கத்தை அளித்துள்ளார்.
தொடர்ந்து இன்று செய்தியாளர்களுடன் பேசிய திருமாவளவன்,
'அம்பேத்கர் எல்லாருக்குமான தலைவர். அவரது நூல் வெளியீட்டு விழாவில் அரசியல் சாயம் பூசப்பட்டது.
நடிகர் விஜய் தனது கட்சி மாநாட்டில் பேசியது தமிழகத்தில் ஒரு சலசலப்பை ஏற்படுத்தியது. திமுக கூட்டணியில் உள்ள விசிக இந்த நிகழ்வில் பங்கேற்றால் அது அரசியலாக்கப்படும். அரசியல் சாயம் பூசப்படும். தேவையில்லாத குழப்பத்தை உருவாக்குவதற்கு இதற்கென்றே இருக்கும் சக்திகள் முயற்சி செய்வார்கள்.
எனவே, அப்படி ஒரு சூழல் ஏற்பட்டுவிடக்கூடாது என்ற எச்சரிக்கை உணர்வுடன் தேவையற்ற சர்ச்சைகளைத் தவிர்க்க விஜய் மட்டுமே பங்கேற்கட்டும் என்ற நிலைப்பாட்டை எடுத்தோம். விஜய்யுடன் எந்த முரண்பாடும் இல்லை, அவருடன் எந்த சிக்கலும் இல்லை' என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.