முதல்வா் மு.க.ஸ்டாலின்
முதல்வா் மு.க.ஸ்டாலின்

அதானியுடன் முதல்வர் சந்திப்பா? தமிழக அரசு ஒப்பந்தமா? செந்தில் பாலாஜி விளக்கம்

அதானி நிறுவனத்தின் சூரிய ஒளி மின்சாரம் ஒப்பந்தம் குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்...
Published on

தொழிலதிபர் கெளதம் அதானியை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார் என்று பரவும் தகவல்களை அமைச்சர் செந்தில் பாலாஜி மறுத்துள்ளார்.

மேலும், திமுக ஆட்சியில் அதானி நிறுவனத்துடன் எவ்வித ஒப்பந்தமும் மேற்கொள்ளவில்லை என்றும், அதிமுக ஆட்சியில் போடப்பட்ட ஒப்பந்தத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் திமுக தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு, ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களில் சூரிய ஒளி மின்சாரம் விநியோக ஒப்பந்தங்களை பெறுவதற்காக அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததை மறைத்து அமெரிக்காவிடம் முதலீடுகளை பெற்றதாக அதானி குழுமம் மீதி அந்நாட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதனிடையே, அதானியை தமிழக முதல்வர் ஸ்டாலின் சந்தித்ததாகவும், அதிக விலைக்கு சூரிய ஒளி ஒப்பந்தம் போடப்பட்டதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.

இந்த நிலையில், சூரிய ஒளி மின்சாரம் விநியோக ஒப்பந்தங்கள் குறித்து விளக்கம் அளித்து தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் தெரிவித்திருப்பதாவது:

“தொழிலதிபர் அதானியை தமிழ்நாடு முதலமைச்சர் சந்தித்தது போலவும், அதிக விலைகொடுத்து அதானியிடமிருந்து சூரிய ஒளி மின்சாரம் பெற ஒப்பந்தம் போட்டிருப்பதுபோலவும் தொடர்ந்து எதிர்க்கட்சிகளும், ஊடகங்களும் கற்பனையான தகவலைக் கட்டுக்கதைகள் போல் வெளியிட்டு - தெரிவித்து வருவதற்குக் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். முதலமைச்சர் அதானியைச் சந்திக்கவும் இல்லை. அதானி நிறுவனத்துடன் நேரடியாகச் சூரிய ஒளிமின்சாரம் பெற எந்த ஒப்பந்தமும் போடவும் இல்லை என்பதைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

’ஒவ்வொரு மாநிலமும் ஆண்டுதோறும் நுகர்கின்ற மொத்த மின்சாரத்தில் குறிப்பிடத்தக்க அளவு புதுப்பிக்கத்தக்க மின் சக்தியைப் பயன்படுத்த வேண்டும். தவறும்பட்சத்தில், அபராதம் செலுத்த வேண்டும்’ என்ற மத்திய அரசின் கட்டாய விதியின் அடிப்படையில் 2020, 2021, 2023 ஆகிய ஆண்டுகளில் 2,000 மெகாவாட் சூரிய ஒளி மின்சாரத்தைக் கொள்முதல் செய்ய தமிழ்நாடு மின்சார வாரியம் மத்திய அரசின் சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (SECI)வுடன் ஒப்பந்தம் செய்துள்ளதே தவிர, எந்தவொரு தனியார் நிறுவனத்துடனும் அல்ல.

இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களைச் சேர்ந்த மின்சார வாரியங்களைப் போல தமிழ்நாடு மின்சார வாரியமும் மத்திய அரசின் சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (SECI) நிறுவனத்துடன் மட்டுமே மின்சாரம் கொள்முதல் செய்து வருகின்றது.

இன்னும் சொல்லப் போனால், மத்திய அரசின் புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தைப் பெறுவது குறித்த கட்டாய விதி எதுவும் இல்லாத காலகட்டத்தில் அதிமுக ஆட்சியில் அதானி லிமிடெட் நிறுவனம், தங்களுக்கு சொந்தமான ஐந்து நிறுவனங்கள் மூலமாக, 648 மெகாவாட் திறன் கொண்ட சூரிய சக்தியை உற்பத்தி செய்வதற்கான எரிசக்தி கொள்முதல் ஒப்பந்தத்தில் 04/07/2015 அன்று, கையெழுத்திட்டது.

இந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள யூனிட்டுக்கு ரூ.7.01 என்ற தொகைக்கு எதிராக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் 2022ல், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த மனு நிலுவையில் உள்ளது.

அதானி நிறுவனத்திடம் இருந்து ஒரு யூனிட் சூரிய ஒளி மின்சாரத்தை ரூ.7.01க்கு நீண்ட கால அடிப்படையில் பெற 2014ல் ஒப்பந்தமிட்ட அரசை விட்டுவிட்டு, 2021ம் ஆண்டு பொறுப்பேற்ற உடனே தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் அதானி நிறுவனத்துக்கு எதிரான வழக்கை திறம்பட நடத்தியை திராவிட முன்னேற்றக் கழக அரசை- மின்சார வாரியத்திற்கு சாதகமாக, அதாவது ரூ.5.10க்கு ஒரு யூனிட் மின்சாரம் என்னும் அளவிற்கு சாதகமான ஆணையைப் பெற்ற அரசை குறை சொல்வது எந்த வகையிலும் நியாயமாகாது. அதனால்தான் அறிக்கைகள் விட ஆர்வம் இருக்கலாம். ஆனால் அதற்கு அடிப்படை புரிதலும் அறிவும் இருக்க வேண்டும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், தமிழ்நாடு அரசு கடந்த மூன்று ஆண்டு காலமும் மின்சார கொள்முதல் குறித்து எந்த ஒரு தனியார் நிறுவனத்துடனும் எவ்வித ஒப்பந்தமும் செய்து கொள்ளவில்லை என்பதை தெள்ளத் தெளிவாக தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.

மின் உற்பத்தியினைப் பொருத்தவரையில், தமிழ்நாடு மின்சார வாரியத்திற்குச் சொந்தமான அனைத்து மின் நிலையங்களிலிருந்தும் முழுமையான அளவில் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் மூலம் மின்வாரியத்திற்கு ஏற்பட்ட நட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளதும் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில்தான் என்பதை, அறியாமையில் உளறிக் கொட்டும் “சில” “அறிக்கை அரசியல்வாதிகள்” புரிந்துகொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

அதிமுக ஆட்சியில் ஒப்பந்தம் போடப்பட்டதையும் மறைத்து- உச்சநீதிமன்ற உத்தரவையும் அறியாதவர்கள் போல்- அதிமுக அரசின் மின்கொள்முதலை திமுக அரசின் மின் கொள்முதல் முடிவு போல் சித்தரிக்க துடிக்கும் அரைகுறை அரசியல்வாதிகளுக்கு அதானி நிறுவனத்தையோ- அதிமுகவையோ விமர்சிக்க துணிச்சல் இல்லாமல் தவிக்கிறார்கள் என்பது மட்டும் புரிகிறது. அதற்குள்தான் அதிமுக- பா.ஜ.க. கூட்டணி திரைமறைவில் ஒளிந்து கிடக்கிறது.

பொய்த் தகவல்களைத் தொடர்ந்து பரப்புவார்களேயானால், அவர்கள் மீது கடும் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இணைப்பு
PDF
அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்ட முழு அறிக்கை
பார்க்க

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com