தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியானது டிச.12-ஆம் தேதிக்கு மேல் தமிழக கடற்கரையை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பூமத்திய ரேகையையொட்டிய இந்திய பெருங்கடல் மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடலில், அதாவது அந்தமானுக்கு தெற்கே, வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இது, மேலும் வலுவடைந்து, தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் சனிக்கிழமை (டிச.7) காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக உருவாகும். இது மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து, டிச.12 -க்கு மேல் இலங்கை மற்றும் தமிழக கடற்கரையை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் டிச.12 வரை தமிழகத்தில், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும், டிச.11, 12 ஆகிய தேதிகளில் கடலூர் தொடங்கி ராமநாதபுரம் வரை உள்ள கடலோர மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்காலிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
காற்றழுத்த தாழ்வுப்பகுதி புயலாக மாறுமா?
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதியானது, காற்றழுத்த மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது. அதேசமயம், புயலாக உருவாவதற்கு சாதகமான சூழல்கள் தற்போதுவரை இல்லை.
இந்த புயல் சின்னத்தால், தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டாவில் டிச.11 முதல் டிச.14 வரை மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தனியாா் வானிலை ஆய்வாளா்கள் கணித்துள்ளனா்.
ஃபென்ஜால் பாதையில் கடந்து செல்லும்
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப்பகுதியானது, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும். ஆனால் புயலாக மாற சாத்தியக்கூறுகள் குறைவாக உள்ளதால் ஃபென்ஜால் புயலின் பாதையில் இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி நகரக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இது புயலாக மாறுமா? அதற்கான வாய்ப்புகள் அமையுமா? அப்படியே புயலாக மாறினாலும் சென்னையில் கரையைக் கடக்குமா என்று பொருந்திருந்து தான் பார்க்க வேண்டும்.