
மதுரை மாவட்டம் அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கத்தை அனுமதிக்கும் நிலை வந்தால் நான் முதல்வர் பதவியில் இருக்க மாட்டேன் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று மதுரை மாவட்டம் அரிட்டப்பாட்டியில் டங்ஸ்டன் சுரங்கத்துக்கு வழங்கப்பட்ட உரிமத்தை ரத்து செய்ய வலியுறுத்தி தனித் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
இந்த தனித் தீர்மானம் மீது பல்வேறு கட்சி உறுப்பினர்களும் உரையாற்றினர். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆற்றிய உரைக்கு பதிலளித்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், டங்ஸ்டன் திட்டத்தை தடுத்தே தீருவோம். ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். ஒருவேளை, அனுமதி தரும் நிலை வந்தால் நான் முதல்வர் பதவியில் இருக்க மாட்டேன் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆவேசமாக பதிலளித்தார்.
பேரவையில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, நீங்கள் கடிதம் எழுதியதாகக் கூறுகிறார்கள். ஆனால், மத்திய அரசு தரப்பில் கடிதம் வரவில்லை என்று கூறுகிறார்களே என ஆவேசமாகக் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், டங்ஸ்டன் சுரங்கம் தொடர்பாக நாங்கள் தொடர்ந்து கடிதம் எழுதியிருக்கிறோம். கடிதம் எழுதும்போதெல்லாம் அது தொடர்பான அறிக்கைகள் செய்தித்தாளில் வெளியிடுகிறோம். பிறகு தெரியவில்லை தெரியவில்லை என்று கேட்டால் எனக்குப் புரியவில்லை என்று கேள்வி எழுப்பினார்.
எடப்பாடி பழனிசாமி பதிலளிக்கையில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், மத்திய சுரங்கத் துறை அமைச்சருக்கு எழுதிய கடிதம் பற்றிய தகவல்கள்தான் தெரியவரவில்லை என்று கூறியதாக பதிலளித்தார்.
தொடர்ந்து பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், நான் முதல்வராக பதவியில் இருக்கும்வரை மத்திய அரசு இந்த திட்டத்தைக் கொண்டு வர முடியாது. கொண்டு வந்தாலும் நிச்சயமாக தடுத்தே தீருவோம். நான் தமிழக முதல்வராக இருக்கும்வரையிலே இந்த திட்டத்தை நாங்கள் அனுமதிக்க மாட்டோம், அனுமதிக்க மாட்டோம், மத்திய அரசு சுரங்கத்தை ஏலம் விட்டாலும் தமிழக அரசு அதற்கு அனுமதிக்காது என்று கூறினார்.
மேலும், தமிழகத்தில் டங்ஸ்டன் சுரங்கத்தை அனுமதிக்கும் நிலை வந்தால் பதவியில் இருக்க மாட்டேன் என்று ஸ்டாலின் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.