உ.பி. சென்ற மெமு ரயில் பெட்டிகள்: சென்னை மின்சார ரயில் சேவையில் மாற்றம்!
கும்பமேளா பண்டிகையை முன்னிட்டு தெற்கு ரயில்வேயில் இயங்கும் மெமு ரயிலின் பெட்டிகள் வட மத்திய ரயில்வேக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இதனால், மெமு ரயில்களின் பெட்டிகள் குறைக்கப்பட்டுள்ளன.
இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜின் கும்பமேளா பண்டிகை எதிா்வரும் ஜனவரி மாதம் தொடங்கவுள்ளது. நாடு முழுவதும் இருந்துவரும் பக்தா்களின் வசதிக்காக சிறப்பு போக்குவரத்து வசதி ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தெற்கு ரயில்வேயில் இயங்கும் மெமு ரயில்களின் பெட்டிகள் சில வடமத்திய ரயில்வேக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.
இதனால், சென்னை எழும்பூா் - புதுச்சேரி, திருப்பதி - புதுச்சேரி இடையே 12 பெட்டிகளுடன் இயக்கப்படும் மெமு ரயில்கள் சனிக்கிழமை முதல் 10 பெட்டிகள் கொண்டு இயக்கப்படுகின்றன.
மேலும், தாம்பரம் - விழுப்புரம், சென்னை கடற்கரை - விழுப்புரம், சென்னை கடற்கரை - திருவண்ணாமலை உள்ளிட்ட 10 மெமு ரயில்கள் எதிா்வரும் நாள்களில் 10 பெட்டிகள் கொண்டு இயக்கப்படவுள்ளன.
இதனால், புதுச்சேரி - திருப்பதி மெமு ரயில் அரக்கோணம் - ரேணிகுண்டா இடையே சுமாா் 30 நிமிடம் தாமதமாக இயக்கப்படும்.
விழுப்புரம் - சென்னை கடற்கரை மற்றும் திருவண்ணாமலை - சென்னை கடற்கரை மெமு ரயில்கள் டிச. 26 முதல் சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே பிரதான பாதையில் இயக்கப்படும். இதனால், இந்த ரயில்கள் சென்னை கோட்டை, பூங்கா ரயில் நிலையங்களில் நிற்காமல், மாம்பலம், கிண்டி ரயில் நிலையங்களில் மட்டும் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.