குடியரசு தின அணிவகுப்பில் தமிழகம் புறக்கணிப்பா? - அமைச்சர் விளக்கம்

குடியரசு தின அணிவகுப்பில் தமிழக ஊர்தி புறக்கணிப்பா? - அமைச்சர் சாமிநாதன் விளக்கம்
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
3 min read

குடியரசு தின அணிவகுப்பு ஊர்திகள் சுழற்சி முறையில்தான் அனுமதிக்கப்படுகிறது என அமைச்சர் சாமிநாதன் கூறியுள்ளார்.

அதேநேரத்தில் உத்தர பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களுக்கு தொடர்ந்து மூன்றாவது முறையாக அணிவகுப்பில் கலந்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டது பாரபட்சமான செயல் என்றும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

வருகிற ஜனவரி 26-ஆம் தேதி குடியரசு நாளன்று மாநில வாரியாக கலாசாராத்தை பிரதிபலிக்கும் விதத்தில் நடைபெறவுள்ள அலங்கார ஊர்தி அணிவகுப்பில் தமிழகத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக நேற்று தகவல் வெளியானது.

இதற்கு தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்தார்.

இந்நிலையில், குடியரசு தின அணிவகுப்பு ஊர்திகள் சுழற்சி முறையில்தான் அனுமதிக்கப்படுகிறது எனவும் 2023-24 ஆம் ஆண்டுகளில் பங்கேற்ற தமிழ்நாடு அரசின் ஊர்திகள் இனி 2026-ஆம் ஆண்டில்தான் பங்கேற்க முடியும் என்பதே மத்திய அரசின் நடைமுறை என்று தமிழ் வளர்ச்சித் துறை சாமிநாதன் விளக்கம் அளித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

'புதுதில்லியில் வரும் 2025 ஆம் ஆண்டு நடைபெறும் குடியரசு தின விழாவில் தமிழ்நாடு அரசின் சார்பில் அலங்கார ஊர்திக்கான அனுமதி மறுப்பு என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்றைய தினம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அன்றாடம் நடைபெறும் அரசு நிகழ்வுகளையும் அரசியலாக்கி, அதிலே ஆதாயம் காணத் துடித்துக் கொண்டிருக்கிறார்.

குடியரசு தின விழாவில் ஆண்டுதோறும் கடமைப் பாதையில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களின் சார்பில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பதனை மத்திய அரசின் சார்பில் அதற்கென அமைக்கப்பட்டுள்ள உயர்மட்டக் குழுவின் மூலம் அந்தந்த மாநிலங்களின் சார்பாக, மாநிலங்களின் வளர்ச்சி, கலாசாரம், பண்பாடு ஆகியவற்றைப் பறைசாற்றுகின்ற வகையில் அலங்கார ஊர்திகளின் வடிவமைப்புகள் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு, அவை உயர்மட்டக் குழுவினரால் உறுதி செய்யப்படுகின்றன.

இந்த நிலையில், இந்தியாவிற்கே வழிகாட்டியாகத் திகழும் தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அமைந்த உடன் 2022 ஆம் ஆண்டு புதுதில்லியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், தமிழ்நாடு அரசின் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட அலங்கார ஊர்தி வடிவமைப்பில், சுதந்திரப் போராட்டத்தில் தமிழ்நாட்டில் அரும்பாடுபட்ட தலைவர்களின் திருவுருவச் சிலைகளை குறிப்பாக. வ.உசிதம்பரனாரை முன்னிலைப்படுத்திய அலங்கார ஊர்தியின் வடிவமைப்பினை மத்திய அரசால் திட்டமிட்டு பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டது.

மத்திய அரசின் இந்த முடிவிற்கு முதலமைச்சர் கடும் கண்டனம் தெரிவித்தார். அத்துடன் அனுமதி மறுக்கப்பட்டதை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்றும் பிரதமருக்கு கடிதமும் அனுப்பினார்.

மேலும், மத்திய அரசால் அனுமதி மறுக்கப்பட்ட இந்த அலங்கார ஊர்திகளை முதலமைச்சர் சென்னையிலே கொடியசைத்து தொடங்கி வைத்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் அலங்கார ஊர்திகள் சென்று லட்சக்கணக்கான மக்கள் அதைப் பார்த்துப் பாராட்டியது வரலாறு. இதனை எதிர்க்கட்சித் தலைவர் மறந்துவிட்டாரா ?

பின்னர் கடந்த 2023, 2024 ஆகிய ஆண்டுகளில் தமிழ்நாடு அரசின் சார்பில் அலங்கார ஊர்திகள் சிறப்பாக பங்கேற்றதோடு,2024 ஆம் ஆண்டுக்கு சிறந்த வடிவமைப்பிற்கான மூன்றாம் பரிசினையும் தமிழ்நாடு பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் மத்திய அரசின் சார்பில் நடைபெறுகின்ற குடியரசு தின அலங்கார ஊர்திகள் அணிவகுப்பில் அனைத்து மாநிலங்களுக்கும் வாய்ப்பு தர வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு, இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்கள் 6 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு மண்டலத்திலும் உள்ள மாநிலங்களின் சார்பில் தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் அலங்கார ஊர்திகளுக்கு வாய்ப்பளிக்கப்படுமேயானால், அடுத்து வருகின்ற மூன்றாம் ஆண்டு வாய்ப்பு வழங்கிட இயலாது என்று எழுத்துப்பூர்வமாக அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு தெரிவித்துள்ளது என்றாலும், அந்தந்த மாநிலங்களின் சார்பில் வழங்கப்படுகின்ற சிறந்த கருப்பொருள்களுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட அலங்கார ஊர்திகளை கடமைப்பாதையில் பங்கேற்காமல், அணிவகுப்பு நிறைவு பெற்ற பின்னர் பொதுமக்கள் பார்வைக்கு நிறுத்திக்கொள்ளலாம் என்றும் மத்திய அரசு கடிதம் வாயிலாகத் தெரிவித்துள்ளது.

இது போன்ற அரசின் நடைமுறைகளை. உள் விவகாரங்களை ஒரு முதலமைச்சராக பணியாற்றியவர் என்பதையும் மறந்துவிட்டு, யாரோ எழுதித்தருகின்ற தகவல்களின் அடிப்படையில், எதிர்க்கட்சித் தலைவர் ஒரு தவறான அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார்.

அதிமுக ஆண்ட 10ஆண்டுகால ஆட்சிக் காலத்தில் ஏதோ தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் தமிழ்நாட்டின் சார்பிலே அலங்கர ஊர்திகள் பங்கேற்றுச் சிறப்பித்தது போன்ற ஒரு மாயையை எதிர்க்கட்சித் தலைவர் உருவாக்கியுள்ளார். அதிமுக ஆட்சி நடைபெற்ற 10 ஆண்டு கால ஆட்சியில் கடந்த 2012 2013, 2015, 2018 ஆகிய ஆண்டுகளில் அலங்கார ஊர்திகள் பங்கேற்கவில்லை என்கின்ற விவரமே அவருக்கு தெரியவில்லை.

2014, 2016, 2017, 2019, 2020, 2021 ஆகிய 6 ஆண்டுகள் மட்டுமே அதுவும் தொடச்சியாக இல்லாமல் அதிமுக ஆட்சியில் அலங்கார ஊர்திகளுக்கு அனுமதிகள் வழங்கப்பட்டன. மேலும், அன்றைய கால கட்டங்களில் மத்திய அரசு தற்போது கொண்டு வந்துள்ள விதிமுறைகள் எதுவும் இல்லை.

தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுரையின்பேரில், தமிழ்நாடு அரசின் சார்பில் கடந்த ஆண்டுகளில் மாநிலத்தின் கலாசாரம், பண்பாடு ஆகியவற்றைப் பறைசாற்றுகின்ற வகையில், அலங்கார ஊர்திக்கான வடிவமைப்பு மாதிரிகளை மத்திய அரசின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள உயர்மட்டக் குழுவினர் பலமுறை பார்த்து வியந்து பாராட்டியுள்ளதையும் எதிர்க்கட்சித் தலைவர் அறிந்துகொள்ளவில்லை.

இனி வரும் காலங்களில் இந்தியாவுக்கும் பிற மாநிலங்களுக்கும் வழிகாட்டியாக திகழ்கின்ற வகையில், நல்ல பல திட்டங்களை நாளும் தொடர்ந்து நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பற்றியும், நல்லாட்சியைப் பற்றியும் குறை கூறுவதை விட்டுவிட்டு, ஆக்கபூர்வமான பணிகளிலே ஈடுபட வேண்டும். எதிர்க்கட்சித் தலைவர் என்கின்ற பதவி என்பது மிகுந்த மரியாதைக்குரியது என்பதை அவர் உணரவேண்டும். அரசுக்கு ஆக்கபூர்வமான நல்ல யோசனைகளை -கருத்துகளைக் கூறி அந்தப் பதவிக்குரிய மரியாதையைக் காப்பாற்றி வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.

இதே நேரத்தில், இரண்டு ஆண்டுகள் ஒரு மாநிலத்தின் ஊர்திகள் தொடர்ந்து இடம்பெற்றால் மூன்றாவது ஆண்டில் அனுமதிக்கப்படாது என்று ஒரு நடைமுறையை மத்திய அரசின் ஆணை தெரிவித்துள்ளது. அந்த நடைமுறையை மத்திய அரசு எல்லா மாநிலங்களுக்கும் ஒரே சீராக பின்பற்றாமல் உத்தரப் பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களுக்கு தொடர்ந்து மூன்றாவது முறை அனுமதித்துவிட்டு தமிழ்நாட்டிற்கு மட்டும் அனுமதி மறுப்பது நியாயமும் நேர்மையும் அற்ற பாரபட்சமான செயல் என்பதையும் சுட்டிக்காட்டுகிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com