சாட்டையால் அடித்துக் கொண்டு போராடிய அண்ணாமலை!

சாட்டையால் அடித்துக் கொண்டு அண்ணாமலை போராடியது பற்றி...
சாட்டையால் அடித்துக் கொண்டு போராடிய அண்ணாமலை
சாட்டையால் அடித்துக் கொண்டு போராடிய அண்ணாமலைDin
Published on
Updated on
1 min read

திமுக அரசைக் கண்டித்து தன்னைத் தானே சாட்டையால் அடித்துக் கொண்டு பாஜக மாநில தலைவர் கே. அண்ணாமலை வெள்ளிக்கிழமை போராட்டம் நடத்தினார்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தமிழக அரசை கண்டித்து சாட்டையால் அடித்துக் கொள்ளும் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும், திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை செருப்பு அணிய மாட்டேன் என்றும் அண்ணாமலை வியாழக்கிழமை தெரிவித்திருந்தார்.

கோவையில் உள்ள வீட்டுக்கு வெளியே இன்று காலை 10 மணியளவில், பச்சை நிற வெட்டி அணிந்து தன்னைத் தானே ஆறு முறை சாட்டையால் அடித்துக் கொண்டு அண்ணாமலை போராட்டம் நடத்தினார்.

அவர் சாட்டையால் அடித்துக் கொள்ளும்போது, ’வெற்றிவேல், வீரவேல்’ என்று முழக்கமிட்ட தொண்டர்கள், சில சாட்டையடிக்கு பிறகு அண்ணாமலையை கட்டியணைத்து தடுத்து நிறுத்தினர்.

தொடந்து செய்தியாளர்களிடம் அண்ணாமலை பேசியதாவது:

“முன்னாள் பிரதமரும் முக்கிய பொருளாதார கொள்கையை கொண்டு வந்தவருமான மன்மோகன் சிங்கிற்கு ஆழ்ந்த இரங்கலை பாஜக சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம். வருகின்ற நாள்களில் அவர் நாட்டுக்கு வகுத்த கொடுத்த பொருளாதார கொள்கைக்காக அவரை எப்போதும் நினைவுகூர்வோம்.

இன்று முன்னெடுத்துள்ள போராட்டம் வருகின்ற நாள்களில் தீவிரப்படுத்துவோம். கண்முன் அடுத்த தலைமுறை அழிந்து கொண்டிருப்பதை கண்டுகொண்டுள்ளோம்.

போரில்கூட பெண்களின் மீது கை வைக்கக் கூடாது என்பது மரபு. தமிழகத்தில் பெண்கள், குழந்தைகள் மீதான குற்றச்செயல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

முருகப் பெருமானிடம் வேண்டி 6 சாட்டை அடிகளை சமர்பிக்கிறோம். இன்றையில் இருந்து விரதம் இருக்கப் போகிறோம். காலணியை நேற்றே கழற்றி வைத்துவிட்டேன். திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை காலணி அணிய மாட்டேன்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவை அடுத்து, பாஜகவின் இன்றைய போராட்டங்கள் ஒத்திவைக்கப்படுகிறது. புதிய தேதி இன்று பிற்பகலுக்குள் அறிவிக்கப்படும்.

உடலை வருத்தி ஒன்றை செய்யும்போது அதற்கான பலன் கிடைக்கும் என்பதால் சாட்டையடி போராட்டம் நடத்தப்பட்டது. சமுதாயத்தில் ஏற்படக் கூடிய அவலங்களுக்கு எதிராக சாட்டையில் அடித்துக் கொண்டேன்.

காவல்துறையின் நடவடிக்கையில் அந்த பெண்ணின் குடும்பங்கள் திருப்தி தெரிவித்துள்ளதாக சென்னை ஆணையர் தெரிவித்துள்ளார். காவல்துறை அதிகாரியாக இப்படி பேசலாமா? இந்த குற்றச் செயல்கள் நடப்பதற்கு முன்னால் தடுக்கப்பட்டிருந்தால் மகிழ்ச்சி அடைந்திருப்பார்கள்” எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com