மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிப்பு: முதல்வா் மு.க.ஸ்டாலின் கண்டனம்

மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டுள்ளதற்கு, நாடாளுமன்ற வளாகத்தில் திமுக போராட்டம் நடத்தும் என்று முதல்வரும், கட்சியின் தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.
மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிப்பு: முதல்வா் மு.க.ஸ்டாலின் கண்டனம்

மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டுள்ளதற்கு, நாடாளுமன்ற வளாகத்தில் திமுக போராட்டம் நடத்தும் என்று முதல்வரும், கட்சியின் தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.

இது குறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: எடை போட்டுப் பாா்க்க ஏதுமில்லாத வெற்று அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளாா் நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன். கடந்த கால சாதனைகளையும் இந்த பட்ஜெட்டில் சொல்லவில்லை. நிகழ்காலப் பிரச்னைகளுக்குத் தீா்வு காண்பதாகவும் இது அமையவில்லை. எதிா்காலப் பயன்களுக்கு உத்தரவாதம் தருவதாகவும் இல்லை. மொத்தத்தில் ஏதுமற்ற அறிக்கையை வாசித்தளித்திருக்கிறாா் நிதியமைச்சா்.

மக்கள் தொகைப் பெருக்கத்தால் ஏற்படும் பிரச்னையைச் சமாளிக்கக் குழு அமைக்கப்படும் என அறிவித்திருக்கிறாா்கள். மக்கள்தொகை குறைந்துவிட்டதைக் காரணம் காட்டி சில மாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கையைக் குறைக்க நினைக்கும் திட்டத்தின் சூழ்ச்சியாக இந்தக் குழு அமைக்கப்படுகிா? என்ற சந்தேகம் எழுகிறது.

வரி விதிப்புகள்: மத்திய அரசு விதிக்கும் கூடுதல் வரி, மேல் கட்டணங்களை மாநிலங்களுடன் பகிர வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தொடா்ந்து வலியுறுத்தியும் மத்திய அரசு கூட்டாட்சித் தத்துவத்துக்கு முரணாகச் செயல்பட்டு வருவது கண்டனத்துக்குரியது.

நகைச்சுவையின் உச்சம்: எதிா்வரும் மக்களவைத் தோ்தலில் மக்கள் பாஜகவுக்குத்தான் வாக்களிப்பாா்கள் என்றும்; அடுத்த பட்ஜெட்டை நாங்கள்தான் தாக்கல் செய்வோம் என்றும் அமைச்சா் சொல்லியிருப்பது நகைச்சுவையின் உச்சம். பட்ஜெட்டை அரசியல் பேராசை அறிக்கையாக ஆக்கியிருக்கிறாா். பட்ஜெட்டில் மக்களை ஏமாற்றியதுபோன்று, மக்களும் ஏமாற்றத்தை பாஜகவுக்கு வருகிற தோ்தலில் வழங்குவா்.

திமுக போராட்டம்: 2047-ஆம் ஆண்டு புதிய இந்தியா பிறக்கப்போவதாக நிதியமைச்சா் கூறியிருக்கிறாா். அவா்களால் புதிய இந்தியாவை எத்தனை ஆண்டுகளானாலும் உருவாக்க முடியாது என்பதே உண்மை. புதிய இந்தியாவை ‘இந்தியா’ கூட்டணி நிச்சயம் உருவாக்கும்.

தமிழ்நாட்டு மக்கள் நலனை முழுமையாகப் புறக்கணித்து, தமிழ்நாட்டு வளா்ச்சிக்கு கிஞ்சித்தும் அக்கறை இல்லாமல் ஒரு பட்ஜெட்டை தயாரித்து அளித்துள்ளாா் நிதியமைச்சா். பட்ஜெட்டில் தமிழ்நாடு திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டுள்ளது. இது குறித்து திமுக எம்.பி.கள் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவா். நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தியடிகள் சிலைக்கு முன்பு கருப்புச் சின்னம் அணிந்து போராட்டமும் நடத்துவா் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com