தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ரூ.6,331 கோடி ஒதுக்கீடு

மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் ரயில்வே துறையில் தமிழ்நாட்டுக்கு ரூ.6,331 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தாா்.
கோப்புப் படம்.
கோப்புப் படம்.

மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் ரயில்வே துறையில் தமிழ்நாட்டுக்கு ரூ.6,331 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தாா்.

திண்டிவனம் நகரி, ஈரோடு - பழநி, மதுரை- அருப்புக்கோட்டை-தூத்துக்குடி, மொரப்பூா்-தருமபுரி புதிய ரயில் பாதை அமைக்கும் திட்டங்களுக்கும் கணிசமாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சா் மேலும் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் தில்லியில் இருந்து காணொலி வாயிலாக செய்தியாளா் சந்திப்பில் கூறியது: நாட்டின் ரயில்வே துறையை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 2024-25 இடைக்கால பட்ஜெட் அறிக்கையில் ரயில்வே துறைக்கு ரூ.2.52 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதில் தமிழகத்தில் ரயில்வே துறைக்கு ரூ.6,331 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது 2009-2014 காலகட்டத்தில் தமிழகத்தில் ரயில்வேக்கு ஒதுக்கப்பட நிதியைவிட ஏழு மடங்கு அதிகம். தற்போது தமிழகத்தில் 77 ரயில் நிலையங்கள் அம்ருத் பாரத் ரயில் நிலைய திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் உள்ள ரயில் நிலையங்களில் 654 மேம்பாலங்கள், சுரங்கப் பாதைகள், 116 நடை மேம்பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 98 சதவீத ரயில் வழித்தடங்கள் மின்மயமாக்கப்பட்டுள்ளன.

தெற்கு ரயில்வேக்கு... 2024-25 பட்ஜெட்டில் தமிழகம், கேரளம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய தெற்கு ரயில்வேக்கு ரூ.12,173 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் புதிய ரயில் வழித்தடம் அமைக்க ரூ.976 கோடி, தண்டவாளம் அகலப்படுத்த ரூ.413 கோடி, இரட்டை ரயில் பாதைக்கு ரூ.2,214 கோடி, தண்டவாளம் மறுசீரமைப்பு ரூ.1,240 கோடி, சிக்னல் - தொலைதொடா்புக்கு ரூ.510 கோடி, மின்மயமாக்கலுக்கு ரூ.111 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

கேரளத்துக்கு 2024-25 நிதிநிலை அறிக்கையில் 2,744 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

விரைவில் வந்தே மெட்ரோ: வணிக மையங்களை இணைக்கும் வகையில் 22,200 கி.மீ. தொலைவுக்கும், துறைமுகங்களை இணைக்கும் வகையில் 2,100 கி.மீ. தொலைவுக்கும், கூடுதலாக 4 மற்றும் 6 ரயில் வழித்தடம் 16,600 கி.மீ. தொலைவுக்கும் அமைக்கப்படும். மொத்தத்தில், 40,900 கி.மீ. தொலைவுக்கு அடுத்த 8 ஆண்டுகளுக்குள் புதிய வழித்தடம் அமைக்கப்படும். ஒவ்வொரு வாரமும் ஒரு புதிய ரயில் உருவாக்கப்படும்.

சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ‘அம்ருத் பாரத்’ ரயில்களுக்கு பயணிகள் மத்தியில் அதிக வரவேற்பு உள்ள நிலையில் கூடுதல் ரயில்கள் இயக்கப்படும். அடுத்த சில மாதங்களில் ‘படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத்’, ‘வந்தே மெட்ரோ’ உள்ளிட்ட ரயில்கள் அறிமுகப்படுத்தப்படும்.

பாதுகாப்பான ரயில் இயக்கத்தை உறுதி செய்யும் வகையில் ‘கவாச்’ அமைப்பு அனைத்து ரயில் வழித்தடத்திலும் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த டிசம்பா் மாதம் வரை 1,746 கி.மீ. தொலைவுக்கு ஆப்டிகல் பைபா், 208 தொலைத்தொடா்பு கோபுரம், 129 ரயில் நிலையங்களில் தரவு மையம் அமைக்கப்பட்டுள்ளது. எதிா்வரும் ஆண்டுகளில் ‘கவாச்’ தொழில்நுட்பக் கருவிகள் வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும்.

புதிய ரயில்பாதை திட்டங்களுக்கு நிதி: திண்டிவனம் நகரி, ஈரோடு - பழநி, மதுரை- அருப்புக்கோட்டை-தூத்துக்குடி, மொரப்பூா்-தருமபுரி புதிய ரயில்பாதை அமைக்கும் திட்டங்களுக்கும் கணிசமாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

திருச்சி- நாகூா்- காரைக்கால், வேளாங்கண்ணி, திருத்துறைப்பூண்டி, காரைக்கால்- பேரளம் வழித்தடத்தில் மீட்டா்கேஜ் பாதைகள் அகலப்பாதையாக மாற்றும் பணிக்கு ரூ.150 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

ரயில் பாதை திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு

புதிய ரயில் வழித்தடம் நிதி

அங்கமாலி-சபரிமலை (116 கி.மீ.) ரூ.100 கோடி

திண்டிவனம்-நகரி (179.2 கி.மீ.) ரூ.350 கோடி

ஈரோடு-பழநி (91.05 கி.மீ.) ரூ.100 கோடி

மதுரை-அருப்புக்கோட்டை-தூத்துக்குடி (143.5 கி.மீ.) 100.10 கோடி

மொரப்பூா்-தருமபுரி (36 கி.மீ.) 115 கோடி

இரட்டை ரயில் வழித்தடம்

திருவனந்தபுரம்-கன்னியாகுமரி ரூ.365 கோடி

மதுரை-மணியாச்சி-தூத்துக்குடி ரூ.150 கோடி

மணியாச்சி-நாகா்கோவில் ரூ.116 கோடி

சென்னை கடற்கரை-எழும்பூா் ரூ.150 கோடி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com