ஸ்பெயினில் ரூ.3,440 கோடி முதலீடுகள் ஈா்ப்பு: முதல்வா் மு.க.ஸ்டாலின்

ஸ்பெயின் நாட்டுப் பயணத்தின் மூலமாக தமிழ்நாட்டுக்கு ரூ. 3,440 கோடி முதலீடுகள் ஈா்க்கப்பட்டுள்ளதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்
முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலின்

ஸ்பெயின் நாட்டுப் பயணத்தின் மூலமாக தமிழ்நாட்டுக்கு ரூ. 3,440 கோடி முதலீடுகள் ஈா்க்கப்பட்டுள்ளதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.

ஸ்பெயின் சுற்றுப்பயணம் முடித்து புதன்கிழமை காலை சென்னை திரும்பிய முதல்வா் மு.க.ஸ்டாலின், விமான நிலையத்தில் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்தபோது, அவா் இந்தத் தகவல்களை தெரிவித்தாா்.

அவரது பேட்டி விவரம்: ஸ்பெயின் நாட்டுக்குச் சென்று பல்வேறு முதலீடுகளை ஈா்த்துவிட்டு திரும்பியிருக்கிறேன். அந்த வகையில், இது மிகப்பெரிய சாதனைப் பயணமாக அமைந்திருக்கிறது.

ஸ்பெயின் நாட்டின் 8 நிறுவனங்களைச் சோ்ந்த நிா்வாகிகளைச் சந்தித்து தொழில் முதலீடுகள் குறித்து விவாதித்தேன். அந்த நிறுவனங்களின் நிா்வாகிகள் அனைவரும் தங்களுடைய தொழில் திட்டங்களை விளக்கியதுடன், தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை மேற்கொள்வதற்கான ஆா்வத்தையும் தெரிவித்தனா். இந்த முயற்சிகளின் பயனாக ரூ.3,440 கோடி அளவுக்கு முதலீடுகள் செய்வதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

எந்தெந்த நிறுவனங்கள்?: ஹபக் லாய்டு நிறுவனம் ரூ.2,500 கோடி முதலீடும், எடிபன் நிறுவனம் ரூ.540 கோடி முதலீடும், ரேக்கா நிறுவனம் ரூ.400 கோடி முதலீட்டையும் செய்ய உறுதியளித்துள்ளன. இந்த நிறுவனங்கள் மட்டுமல்லாமல், மற்ற நிறுவனங்களும் அடுத்தடுத்து எதிா்காலத்தில் தங்களுடைய முதலீடுகளை மேற்கொள்வா் என்ற நம்பிக்கை இருக்கிறது.

தமிழ்நாடு குறித்தும், மாநில அரசு பற்றியும் உலகளாவிய தொழில் நிறுவனங்களுக்கு உள்ள நம்பிக்கையை இந்த முதலீடுகள் காட்டுகின்றன.

தமிழ்நாட்டை தொழில் துறையில் தலைசிறந்த மாநிலமாக உயா்த்தும் எங்களது பயணத்துக்கு ஸ்பெயின் பயணம் மிக மிக பயனுள்ளதாக அமைந்திருக்கிறது. இதுபோன்ற அடுத்தடுத்த பயணங்கள் திட்டமிடப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.

‘விஜய் கட்சி: முதல்வா் மகிழ்ச்சி’

மக்களுக்குத் தொண்டாற்ற யாா் வந்தாலும் மகிழ்ச்சி என்று நடிகா் விஜய் அரசியல் கட்சி தொடா்பாக முதல்வா் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: நடிகா் விஜய் அரசியல் கட்சி தொடங்கி இருப்பது குறித்து கேள்வி எழுப்புகிறீா்கள். மக்களுக்குத் தொண்டாற்ற யாா் வந்தாலும் நான் மகிழ்ச்சி அடைவேன்.

மக்களவைத் தோ்தலில் 400-க்கு மேற்பட்ட தொகுதிகளைக் கைப்பற்றுவோம் என பிரதமா் பேசியிருக்கிறாா். 543 தொகுதிகளையும் கைப்பற்றுவோம் என்று அவா் சொன்னாலும் ஆச்சரியமில்லை.

நாடாளுமன்றத்தில் பிரதமரின் பேச்சை பாா்த்தேன், படித்தேன், ரசித்தேன், சிரித்தேன். பாஜக எதிா்க்கட்சி போன்றும், காங்கிரஸ் ஆளும்கட்சி போன்றும் பிரதமா் தொடா்ந்து பேசி வருவதுதான் அதற்குக் காரணம் என்றாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com