திருப்பூரில் ஒவ்வொரு வீட்டின் குடிநீர் குழாய்களிலும் மினரல்வாட்டர்: அமைச்சர் உதயநிதி

திருப்பூரில் உள்ள ஒவ்வொரு வீட்டின் குடிநீர் குழாய்களிலும் மினரல்வாட்டர் தான் வரப்போகிறது என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் சிக்கண்ணா கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.1,362 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டப்பணிகளை ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைக்கிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
திருப்பூர் சிக்கண்ணா கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.1,362 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டப்பணிகளை ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைக்கிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

திருப்பூர்: திருப்பூரில் உள்ள ஒவ்வொரு வீட்டின் குடிநீர் குழாய்களிலும் மினரல்வாட்டர் தான் வரப்போகிறது என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் ரூ.1,362 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளின் தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு தலைமை வகித்தார். தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் முன்னிலை வகித்தார். இதில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புதிய திட்டங்களைத் தொடக்கிவைத்துப் பேசியதாவது:

திருப்பூரில் ரூ.1,362 கோடி மதிப்பீட்டில் நிறைவு பெற்ற திட்டங்கள், புதிய திட்டங்கள் அடிக்கல் நாட்டுவது, பல்வேறு துறைகள் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. வந்தாரை வாழவைக்கும் தமிழகம் என்று திருப்பூரை மனதில் வைத்துத்தான் இந்த வாக்கியத்தை சொல்லியிருப்பார்கள் என்று நான் நம்புகிறேன்.

ஏனென்றால் அந்த அளவுக்கு பலருக்கு வாழ்வு அளிக்கும் மாநகரம் திருப்பூர். ஈ.வெ.ராவும், அண்ணாவும் முதன் முதலில் சந்தித்த திருப்பூருக்கு, அமைச்சரான பின்னர் முதல் முதலாக இங்கு வந்துள்ளேன். மாநில நிதி நிலைமையின் சக்திக்கு மீறி இந்தத் திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கிக் கொண்டிருக்கிறார்.

திருப்பூர் மிகச்சிறந்த தொழில் நகரமாகும். மற்ற மாவட்ட மக்களுக்கு ஜிஎஸ்டி என்றால் என்ன என்று தெரியாதபோது, அதில் உள்ள பாதகங்களை அலசி ஆராய்ந்து தமிழக மக்களுக்கு சொன்னவர்கள்தான் இந்த திருப்பூர் மாவட்ட மக்கள். கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் இருந்து மத்திய அரசுக்கு ரூ.6 லட்சம் கோடி வரி செலுத்தப்பட்டுள்ளது. ஆனால் மத்திய அரசு தமிழகத்துக்கு திருப்பிக் கொடுத்த தொகை வெறும் ரூ. 1 லட்சத்து 58 ஆயிரம் கோடி மட்டுமே.

தமிழக மக்கள் மத்திய அரசுக்கு வரியாக ஒரு ரூபாய் செலுத்தினால் திருப்பிக் கொடுப்பது வெறும் 29 பைசாதான். மற்ற மாநிலங்களுக்கு அதிகமாகக் கொடுக்கின்றனர்.

இந்த புதிய குடிநீர் திட்டத்தின் மூலமாக திருப்பூரில் உள்ள 2 லட்சம் வீட்டு இணைப்புகளுக்கு ஒறு நாள்விட்டு ஒரு நாள் குடிநீர் விநியோகம் செய்யப்படவுளது.

இதற்காக மாநகரில் 29 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் கட்டப்பட்டுள்ளது. திராவிட மாடல் அரசு எதிர்காலத் தேவையை நோக்கித்தான் கொள்கைகளும், அரசு திட்டங்களும் உருவாக்கப்படுகிறது.

திருப்பூரில் உள்ள ஒவ்வொரு வீட்டின் குடிநீர் குழாய்களிலும் மினரல்வாட்டர் தான் வரப்போகிறது என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.  

இந்த விழாவில், மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ், நீலகிரி மக்களவை உறுப்பினர் ஆ.ராசா, திருப்பூர் மக்களவை உறுப்பினர் கே.சுப்பராயன், பொள்ளாச்சி மக்களவை உறுப்பினர் சண்முகசுந்தரம், திருப்பூர் தெற்கு சட்டப்பேரவை உறுப்பினர் க.செல்வராஜ், மாநகராட்சி 4 ஆவது மண்டலத் தலைவர் இல.பத்மநாபன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com