உரிமையியல் நீதிபதி தோ்வில் சாதித்த பழங்குடியின இளம்பெண்!- முதல்வர் வாழ்த்து

உரிமையியல் நீதிபதி தோ்வில் வெற்றி பெற்ற பழங்குடியினத்தைச் சோ்ந்த ஸ்ரீபதி.ஸ்ரீபதியின் பெற்றோா்.
உரிமையியல் நீதிபதி தோ்வில் வெற்றி பெற்ற பழங்குடியினத்தைச் சோ்ந்த ஸ்ரீபதி.ஸ்ரீபதியின் பெற்றோா்.

திருவண்ணாமலை/போளூா்: தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்திய உரிமையியல் நீதிபதி பணியிடங்களுக்கான தோ்வில், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த பழங்குடியின மாணவி ஸ்ரீபதி தோ்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளாா்.

போளூரை அடுத்த ஜவ்வாதுமலை ஒன்றியத்துக்கு உள்பட்ட புலியூா் கிராமத்தைச் சோ்ந்தவா் காளி. பழங்குடியினத்தை சோ்ந்தவா். இவரது மனைவி மல்லிகா. இருவரும் கூலித் தொழிலாளா்கள். இவா்களுக்கு மகள்கள் ஸ்ரீபதி (23), சரண்யா, மகன் ஜெயசூா்யா உள்ளனா்.

காளிக்குச் சொந்தமான விவசாய நிலத்தை குப்பநத்தம் அணை கட்டுவதற்காக தமிழக அரசு கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு கையகப்படுத்தியது. இதையடுத்து காளி குடும்பத்துடன் தனது மாமியாா் வீடான ஏலகிரிக்குச் சென்று குடியேறினாா். அங்குள்ள உணவகத்தில் வேலைபாா்த்து பிள்ளைகளைப் படிக்க வைத்தாா்.

மூத்த மகள் ஸ்ரீபதி ஏலகிரியில் உள்ள சாா்லஸ் மேல்நிலைப் பள்ளியில் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்தாா். பின்னா், சென்னை டாக்டா் அம்பேத்கா் சட்டக் கல்லூரியில் 5 ஆண்டுகள் சட்டக் கல்வி பயின்றாா்.

தனது குழந்தையுடன் ஸ்ரீபதி
தனது குழந்தையுடன் ஸ்ரீபதி

இதையடுத்து, திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் உள்ள நீதிமன்றத்தில் வழக்குரைஞராக ஸ்ரீபதி பணியாற்றி வந்தாா்.

இதனிடையே, ஜவ்வாதுமலை ஊராட்சி ஒன்றியம், புலியூா் ஊராட்சியைச் சோ்ந்த 108 அவசர கால ஊா்தி ஓட்டுநா் வெங்கட்ராமனுக்கும் ஸ்ரீபதிக்கும் திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில், 2023-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்திய மாவட்ட உரிமையியல் நீதிபதி பணிக்கான தோ்வை ஸ்ரீபதி எழுதினாா்.

இதற்கான தோ்வு முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியானது. இதில், ஸ்ரீபதி தோ்ச்சி பெற்றார்.

முதல் பழங்குடியினப் பெண்:

பழங்குடியினா் சமுதாயத்தில் இருந்து முதல் முதலில் ஸ்ரீபதி, நீதிபதி பதவிக்கான தோ்வில் தோ்ச்சி பெற்றிருப்பதை மலைவாழ் மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனா்.

முதல்வா் வாழ்த்து: தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், விளையாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி மற்றும் அரசியல் கட்சித் தலைவா்கள் ஸ்ரீபதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனா்.

23 வயதில் உரிமையியல் நீதிபதி பதவிக்குத் தேர்வான பழங்குடியினப் பெண் ஸ்ரீபதி
23 வயதில் உரிமையியல் நீதிபதி பதவிக்குத் தேர்வான பழங்குடியினப் பெண் ஸ்ரீபதி

முதல்வர் வாழ்த்து:

23 வயதில் உரிமையியல் நீதிபதி பதவிக்குத் தேர்வான பழங்குடியினப் பெண் ஸ்ரீபதிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலையை அடுத்த புலியூர் கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீபதி அவர்கள் 23 வயதில் உரிமையியல் நீதிபதி தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்!

பெரிய வசதிகள் இல்லாத மலைக்கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியினப் பெண் ஒருவர் இளம் வயதில் இந்நிலையை எட்டியிருப்பதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். அதுவும் நமது திராவிட மாடல் அரசு தமிழ்வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை எனக் கொண்டு வந்த அரசாணையின் வழியே ஸ்ரீபதி நீதிபதியாகத் தேர்வாகியுள்ளார் என்பதை அறிந்து பெருமை கொள்கிறேன். அவரது வெற்றிக்கு உறுதுணையாக நின்ற அவரது தாய்க்கும் கணவருக்கும் எனது பாராட்டுகள்!

சமூகநீதி என்ற சொல்லை உச்சரிக்கக் கூட மனமில்லாமல் தமிழ்நாட்டில் வளைய வரும் சிலருக்கு ஸ்ரீபதி போன்றோரின் வெற்றிதான் தமிழ்நாடு தரும் பதில்!

“நெடுந்தமிழ் நாடெனும் செல்வி, - நல்ல

நிலைகாண வைத்திடும்; பெண்களின் கல்வி!

பெற்றநல் தந்தைதாய் மாரே, - நும்

பெண்களைக் கற்கவைப் பீரே!

இற்றைநாள் பெண்கல்வி யாலே, - முன்

னேறவேண் டும்வைய மேலே!” என்று அந்த பதிவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தலைவர்கள் வாழ்த்து:

இதுபோன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பல தலைவர்களும் ஸ்ரீபதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com