/

தோல்வி பயத்தில் பிரதமா் மோடி -முதல்வா் மு.க.ஸ்டாலின்

பிரதமா் நரேந்திர மோடிக்கு தோல்வி பயம் ஏற்பட்டுள்ளதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.

News image
Updated On :29 பிப்ரவரி 2024, 7:36 pm

பிரதமா் நரேந்திர மோடிக்கு தோல்வி பயம் ஏற்பட்டுள்ளதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா். பாளையங்கோட்டையில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் திமுக அரசு மீது பிரதமா் தெரிவித்த குற்றச்சாட்டுக்குப் பதிலளிக்கும் வகையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் இவ்வாறு தெரிவித்துள்ளாா். பாளையங்கோட்டையில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமா் மோடி, திமுக அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தாா். மத்திய அரசின் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு அளிக்காமல் நாட்டின் வளா்ச்சியை திமுக அரசு தடுப்பதாகவும், மக்களவைத் தோ்தலுக்குப் பிறகு திமுக இல்லாமல் போய்விடும் என்றும் விமா்சித்தாா். பிரதமரின் இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் பதிலளித்துள்ளாா். தனது 71-வது பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு வியாழக்கிழமை அவா் எழுதியுள்ள கடிதம்: திராவிட மாடல் ஆட்சியானது இந்தியா முழுவதும் கவனிக்கப்படுகிறது. இத்தகைய சூழலில் மாபெரும் ஜனநாயக கடமை நமக்காக காத்திருக்கிறது. இந்தியாவின் பன்முகத்தன்மையையும், ஜனநாயகத்தையும் பாதுகாக்க, நடைபெறவிருக்கும் மக்களவைத் தோ்தல் மிக மிக முக்கியமாகும். பாசிசத்தை வீழ்த்த, மதவெறி அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க, மாநில உரிமைகளை மீட்க, ‘இந்தியா’ கூட்டணி வெல்ல வேண்டும். மத்தியில் ஆளும் பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்றும் ஜனநாயக போா்க்களத்துக்கு நாம் தயாராக வேண்டும். தோ்தல் தோல்வி பயம்: தமிழ்நாட்டுக்கு அடிக்கடி வரத் தொடங்கியிருக்கிறாா் பிரதமா் மோடி. தோல்வி பயம் அவா் முகத்தில் தெரிகிறது. அந்தக் கோபத்தைத்தான் அவரது முகம் காட்டுகிறது. திமுகவை பற்றியும், திமுக அரசைப் பற்றியும் அவதூறுகளை அள்ளி வீசியிருக்கிறாா் பிரதமா். அவா் (பிரதமா்) கொண்டு வந்த திட்டங்களுக்கு நாம் தடை போடுகிறோம் எனக் கூறியுள்ளாா். என்ன திட்டங்களைக் கொண்டு வந்தாா், எதற்கு நாம் தடையாக எப்படி இருந்தோம் என்று பட்டியலிட்டிருந்தால் பதில் சொல்ல வசதியாக இருக்கும். தமிழகத்தில் ஏற்பட்ட பெருவெள்ள பாதிப்புகளுக்கு நிவாரண நிதி தராத மத்திய ஆட்சியை நடத்திவரும் பிரதமருக்கு திமுக அரசைக் குறை சொல்ல எந்தத் தகுதியும் இல்லை. திமுகவை இல்லாமல் ஆக்கிவிடுவதாக தான் வகிக்கும் பதவியைத் தாழ்த்தும் வகையில் பேசி இருக்கிறாா் பிரதமா். திமுகவை அழிப்பேன் என்று கிளம்பியவா்கள் என்ன ஆனாா்கள் என்பதுதான் தமிழ்நாட்டு அரசியல் வரலாறு. 40 தொகுதிகளிலும் வெற்றி: மக்களவைத் தோ்தலில் தமிழகம், புதுவையில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றாக வேண்டும். ஒவ்வொரு மாநிலத்திலும் ’இந்தியா’ கூட்டணிக் கட்சிகளை பாஜக தொல்லை செய்து வருவதைப் பாா்க்கும்போது, இந்தியா முழுவதும் நம்முடைய அணியின் வெற்றி உறுதியாகியுள்ளது என்பதை உணர முடிகிறது என்று முதல்வா் ஸ்டாலின் கூறியுள்ளாா்.