

ஆம்பூர் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி இரு பெண் குழந்தைகள் உயிரிழந்தனர். குடும்பத்துடன் கோவிலுக்குச் சென்ற போது நேரிட்ட விபத்தில், 3 பேர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பெரிய கம்மியம்பட்டு பகுதியை சேர்ந்தவர் விவசாயி பரந்தாமன் (47). இவர் தன்னுடைய மனைவி காவேரி மற்றும் 3 குழந்தைகளுடன் இருசக்கர வாகனத்தில் ஆம்பூரில் உள்ள ஆஞ்சனேயர் கோயிலுக்கு சென்று கொண்டு இருந்தார்.
அப்போது ஆம்பூர் அருகே மாராபட்டு என்ற இடத்தில் பெங்களூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த லாரி வளைவில் திரும்பியபோது பின்னால் வந்து கொண்டிருந்த இருசக்கர வாகனம் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதையும் படிக்க.. காத்திரமான மார்க்ஸியக் கலைச்சொற்கள் - நூல் அறிமுகம் I விமர்சனம்
இதில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த கார்த்திகா(8), பேரரசி (5) ஆகிய இரண்டு பெண் குழந்தைகள் லாரி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் விபத்தில் பரந்தாமன், அவரது மனைவி காவேரி மற்றும் மூத்த மகள் இளவரசி(12) ஆகிய 3 பேர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் விரைந்து சென்று பலியான இரண்டு குழந்தைகளின் சடலத்தை மீட்டு உடல் கூறாய்வுக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு தப்பியோடிய லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர்.
புத்தாண்டு தினத்தன்று இருசக்கர வாகனத்தில் கோயிலுக்கு சென்ற குடும்பத்தினர் விபத்தில் சிக்கி குழந்தைகள் இருவர் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.