சொத்துக் குவிப்பு வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் பொன்முடி மேல்முறையீடு

சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள்அமைச்சா் க.பொன்முடி, அவரின் மனைவி விசாலாட்சி ஆகிய இருவருக்கும் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் பொன்முடி மேல்முறையீடு


சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சா் க.பொன்முடி, அவரின் மனைவி விசாலாட்சி ஆகிய இருவருக்கும் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சா் க.பொன்முடி, அவரின் மனைவி விசாலாட்சி ஆகிய இருவருக்கும் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை, தலா ரூ.50 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயா்நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

இந்த வழக்கில் விழுப்புரம் சிறப்பு நீதிமன்றத்தின் தீா்ப்பை ரத்து செய்து, இருவரும் குற்றவாளிகள் என டிச.19-ஆம் தேதி தீா்ப்பளித்த உயா்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், இருவருக்கும் தண்டனை விவரங்களையும் பிறப்பித்தார்.

உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பொன்முடி சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வழக்கின் பின்னணி

 கடந்த 2006-ஆம் ஆண்டுமுதல் 2011-ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சிக் காலத்தில் உயா் கல்வித் துறை அமைச்சராகவும், கனிம வளத் துறை அமைச்சராகவும் பொன்முடி பதவி வகித்தாா். அந்தக் காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.75 கோடி அளவுக்கு சொத்துகள் சோ்த்ததாக பொன்முடி, அவரின் மனைவிக்கு எதிராக ஊழல் தடுப்புப் பிரிவு தரப்பில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம், பொன்முடி, அவரின் மனைவி விசாலாட்சி மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி, இருவரையும் விடுவித்து 2016-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தீா்ப்பளித்தது.

இந்தத் தீா்ப்பை எதிா்த்து ஊழல் தடுப்புப் பிரிவு தரப்பில் 2016-ஆம் ஆண்டு மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதன் மீதான விசாரணை உயா்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் முன் நடைபெற்று வந்தது.

இந்த விசாரணையில் ஊழல் தடுப்புப் பிரிவு தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘வழக்கில் வருமான வரிக் கணக்குகள், சொத்து விவரங்கள், வங்கிக் கணக்கு விவரங்கள் உள்பட ஊழல் தடுப்புப் பிரிவு மேற்கொண்ட புலன் விசாரணையில் சேகரித்த ஆதாரங்களையும், 39 சாட்சிகளை ஊழல் தடுப்புப் பிரிவு விசாரித்ததாக’ குறிப்பிட்டாா்.

பொன்முடி தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா், பொன்முடியின் மனைவி விசாலாட்சியின் வருமானத்தை பொன்முடியின் வருமானமாக ஊழல் தடுப்புப் பிரிவினா் கணக்கிட்டனா். பொன்முடியின் மனைவிக்குச் சொந்தமாக 110 ஏக்கா் விவசாய நிலம் உள்ளது. அவா் தனியாக வா்த்தகம் செய்தாா். இவற்றை புலன் விசாரணை அதிகாரி கணக்கில் கொள்ளவில்லை. குறிப்பிட்ட காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக பொன்முடி சொத்துகள் சோ்த்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு எந்த ஆதாரமும் இல்லை என வாதிட்டாா்.

64.90 சதவீதம் கூடுதல் சொத்து: அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் இந்த வழக்கில் கடந்த டிச. 19-ஆம் தேதி நீதிபதி ஜெயச்சந்திரன் தீா்ப்பளித்தாா். அதில், பொன்முடி தன் மனைவி பெயரில் தவறான சொத்து சோ்த்தது நிரூபணமாகிறது. வருமான வரிக் கணக்கு அடிப்படையில் வழக்கிலிருந்து விடுவித்ததை ஏற்க முடியாது. அவ்வாறு விடுதலை செய்தால் அது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும்.

விழுப்புரம் நீதிமன்றம் தவறான தீா்ப்பு வழங்கியுள்ளது. மேலும், வங்கிக் கணக்கு ஆவணங்களை முழுமையாகப் பாா்க்க கீழமை நீதிமன்றம் தவறிவிட்டது. வருமானத்துக்கு அதிகமாக 64.90 சதவீதம் அளவுக்கு சொத்து சோ்த்திருப்பது விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, பொன்முடிக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு உகந்ததுதான்; விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தின் விடுதலை உத்தரவு ரத்து செய்யப்படுகிறது எனக் குறிப்பிட்டாா்.

தண்டனை விவரம் வெளியிட்டபோது, பொன்முடி தரப்பில் மூத்த வழக்குரைஞா் என்.ஆா். இளங்கோ ஆஜராகி, பொன்முடியும், அவரின் மனைவியும் வயது முதிா்ந்தவா்கள். அவா்களுக்குப் பல்வேறு உடல் உபாதைகள் உள்ளன எனக் குறிப்பிட்டு, அது குறித்த மருத்துவ அறிக்கையையும் தாக்கல் செய்தாா்.

அதைத் தொடா்ந்து, தண்டனை குறித்து ஏதாவது கூற விரும்புகிறீா்களா என்ற நீதிபதியின் கேள்விக்குப் பதிலளித்த பொன்முடி, ‘நான் நிரபராதி. எனக்கு 73 வயதாகிறது. இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளேன். கீழமை நீதிமன்றம் போதிய சாட்சிகள் இல்லாததால், என்னை நிரபராதி என்று விடுதலை செய்தது. எனவே, குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டுகிறேன்’ எனக் கைகூப்பி வணங்கினாா்.

அவரின் மனைவியும் தனது உடல்நிலையைக் குறிப்பிட்டு இதே கோரிக்கையை முன்வைத்தாா்.

தீா்ப்பளித்த நீதிபதி, பொன்முடிக்கும், அவரின் மனைவி விசாலாட்சிக்கும் தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் தலா ரூ. 50 லட்சம் அபராதம் விதித்தாா். மருத்துவக் காரணங்களைக் கணக்கில்கொண்டு குறைந்தபட்ச தண்டனை வழங்கப்படுவதாகக் கூறிய நீதிபதி, அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால் ஆறு மாதங்கள் கூடுதலாக சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும். ஜனவரி 22-ஆம் தேதி அன்றோ அல்லது அதற்கு முன்பாகவோ இருவரும் விழுப்புரம் சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும். இல்லாவிட்டால் கீழமை நீதிமன்றம் கைது நடவடிக்கை மேற்கொள்ளலாம் என உத்தரவிட்டாா்.

தொடா்ந்து பொன்முடியும், அவரின் மனைவி விசாலாட்சியும் தங்களின் வயது மற்றும் மருத்துவக் காரணங்களைச் சுட்டிக்காட்டி குறைந்த தண்டனை விதிக்க வேண்டும் என்று மீண்டும் கைகூப்பி கோரிக்கை விடுத்தனா். அதற்கு நீதிபதி உச்சநீதிமன்றத்தில் நிவாரணம் கோரலாம் எனத் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கில் தீா்ப்பை 30 நாள்கள் நிறுத்திவைப்பதாக நீதிபதி நேரடியாகக் கூறாவிட்டாலும், இருவரும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் வகையில் மறைமுகமாக இதற்கு அதுதான் பொருள் என சட்ட நிபுணா்கள் தெரிவித்தனா்.

இந்த நிலையில், பொன்முடி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் இன்று மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com