முடிச்சூர் அருகே ஆம்னி பேருந்து நிலையம்

ஆம்னி பேருந்துகளுக்கு முடிச்சூரில் கட்டப்பட்டு கொண்டிருக்கின்ற ஆம்னி பேருந்து நிறுத்தும் இடத்தை மார்ச் மாதத்திற்குள் முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில்..
கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில்..

ஆம்னி பேருந்துகளுக்கு முடிச்சூரில் கட்டப்பட்டு கொண்டிருக்கின்ற ஆம்னி பேருந்து நிறுத்தும் இடத்தை மார்ச் மாதத்திற்குள் முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வரால், செங்கல்பட்டு மாவட்டம், கிளாம்பாக்கத்தில் திறந்து வைக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை இன்று சென்னைப் பெருநகர் வளர்ச்சி குழும அமைச்சர் (ம) தலைவரும் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான பி.கே.சேகர்பாபு நேரில் சென்று பார்வையிட்டு, இம்முனையத்தில் பயணிகள் சுலபமாக செல்வதற்காக இணைப்புப் பேருந்து மற்றும் இணைப்புப் பாதை அமைப்பது குறித்தும், மாற்றுத்திறனாளிகளுக்கு மின்கல ஊர்தியில் சக்கர நாற்காலிகள் அமைப்பது குறித்தும், பயணிகளுக்கு தேவையான கூடுதல் வசதிகள் குறித்தும் ஆய்வு செய்தார்.

இப்பேருந்து முனையத்தை முழுமையாக மக்கள் மகிழ்ச்சியோடு பயன்படுத்துகின்ற அளவிற்கு அனைத்து தேவையான கூடுதல் வசதிகளையும் படிப்படியாக நிறைவேற்றி தருவோம் என கூறினார்.

பிறகு, அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் பேசும்போது, காவல் நிலைய கட்டுமானப் பணியும் இந்த பொங்கல் முடிந்தவுடன் துவக்குவதற்குண்டான ஆய்வினையும் இன்றைக்கு மேற்கொண்டு இருக்கின்றோம் என்றார்.

அதேபோல் முகப்பில் அமைக்கப்பட இருக்கின்ற ஒரு வளைவு  அதையும் விரைவுபடுத்தி இந்த மாத இறுதிக்குள் நிறைவு செய்ய இருக்கின்றோம். குறிப்பாக கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் அமைய இருக்கின்ற புதிய ரயில் நிலையம். அந்த ரயில் நிலையத்தின் பணிகளை வேகப்படுத்துவதற்கு 20 கோடி ரூபாயை சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் முதல்வர் அவர்களின் உத்தரவிற்கேற்ப வழங்கியிருக்கின்றோம்.

அந்த பணிகளுக்கு உண்டான ஒப்பந்தம் கோரப்படுகின்ற பணிகளையும் அந்த பணிகளை விரைவுபடுத்துவதற்கு ரயில்வே துறையுடன் நம்முடைய துறையினுடைய செயலாளர், உறுப்பினர், செயலாளர் கலந்தாய்வு கூட்டத்தை மேற்கொள்ள இருக்கின்றார்கள். அங்கே அமைக்கப்படுகின்ற ஸ்கைவாக் பணிகளையும். விரைவுபடுத்துவதற்குண்டான பல்வேறு திட்டங்களை இன்றைக்கு இந்த ஆய்வுக்கூட்டத்தில் எடுத்துக் கூறி இருக்கிறார்கள்.

அதேபோல் இது எட்டு வழிச்சாலை என்பதால் மக்கள் வருங்காலங்களில் பேருந்து முனையம் முழுமையாக பயன்பாட்டிற்கு வரும்போது எந்த வகையில் சாலையை கடக்க வேண்டும் என்று முயற்சிப்பவர்களுக்கு எந்த வகையிலும் விபத்துகள் ஏற்படாமல் இருப்பதற்காக ஒரு நடை மேம்பாலத்தை அமைப்பதற்கும் இன்றைய ஆய்வு கூட்டத்தில் முடிவு எடுத்திருக்கின்றோம்.

அதேபோல் ஆம்னி பேருந்துகளுக்கு முடிச்சூரில் கட்டப்பட்டு கொண்டிருக்கின்ற ஆம்னி பேருந்து நிறுத்தும் இடத்தை விரைவாக முடிப்பதற்கு மார்ச் மாதத்திற்குள் அந்தப் பணிகளை முடித்து ஆம்னி பேருந்துகள் அங்கு நின்று வருவதற்கு ஏற்பாடுகளை விரைந்து செய்வதற்கும் இந்த ஆய்வுக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது.

இப்படி வாரம் தோறும் இரண்டு நாட்களாவது கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தினுடைய தேவைகளை அறிந்து முழுமையாக இந்த கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் முழுமையாக மக்கள் மகிழ்ச்சியோடு பயன்படுத்துகின்ற அளவிற்கு அனைத்து அடிப்படை வசதிகளையும் படிப்படியாக நிறைவேற்றி தருவோம் என்ற உறுதியை உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com