பேரூராட்சிகளாக தரம் உயர்த்தும் முன்பு மக்களிடம் கருத்து கேட்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

ஊராட்சிகளை பேரூராட்சிகளாக தரம் உயர்த்தும் முன்பு மக்களிடம் கருத்து கேட்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
எடப்பாடி பழனிசாமி (கோப்புப்படம்)
எடப்பாடி பழனிசாமி (கோப்புப்படம்)
Published on
Updated on
1 min read

ஊராட்சிகளை பேரூராட்சிகளாக தரம் உயர்த்தும் முன்பு மக்களிடம் கருத்து கேட்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் உள்ள ஊராட்சிகளை பேரூராட்சிகளாக தரம் உயர்த்தும் முன்பு அப்பகுதி மக்களின் கருத்தினை கேட்டறிய வேண்டும் என்று தமிழக அரசை வியாழக்கிழமை வலியுறுத்தினார்.

இதுகுறித்து எக்ஸ் சமூக ஊடகத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, “சிஎஃப்சி எனப்படும் மத்திய நிதி ஆணையத்தின் நிதி பேரூராட்சிகளுக்கும், நகராட்சிகளுக்கும் கிடையாது. அதைப் போல நூறு நாள் வேலைத் திட்ட நிதியும் பேரூராட்சிகளுக்கு கிடையாது.

பேரூராட்சி மற்றும் நகராட்சிகளுக்கு இதுபோன்ற மத்திய அரசின் நிதி வழங்கப்படுவதில்லை. எனவே தற்போதுள்ள ஊராட்சிகளையோ அல்லது ஊராட்சிகளில் உள்ள கிராமப் பகுதிகளையோ, நகரப் பகுதிகளுடன் இணைப்பதால் மத்திய அரசு, ஊராட்சிகளுக்கு நேரடியாக வழங்கும் நிதி நின்றுபோவதுடன், புதிதாக இணைக்கப்பட்ட ஊராட்சிப் பகுதிகளின் வீட்டு வரி மற்றும் சொத்து வரி உயரும். நிலத்தின் வழிகாட்டி மதிப்பு உயரும். 

மாநிலங்களிடம் இருந்து பெறப்படும் வரி வருவாய்தான் மீண்டும் மத்திய அரசு நிதியாக அந்தந்த மாநிலங்களில் உள்ள ஊராட்சிகளின் முன்னேற்றத்திற்கு மத்திய அரசால் வழங்கப்படுகின்றன. இந்நிலையில் ஊராட்சிகளை நகரப் பகுதிகளுடன் இணைப்பதன் மூலம் மாநிலத்திற்கு வரக்கூடிய மத்திய அரசின் நிதி பெருமளவு குறையக்கூடிய அபாயம் உள்ளது. 

எனவே தமிழ்நாடு முழுவதும் இதுபோன்று ஊராட்சிகளை நகரப் பகுதிகளுடன் இணைப்பதற்கு முன்பு, அந்தந்த ஊராட்சிகளில் வசிக்கும் பொதுமக்கள், அரசியல் கட்சிகள், நலச் சங்கங்கள் உள்ளிட்டோரிடம் கருத்துக் கேட்புக் கூட்டங்களை நடத்தி, அவர்களின் சம்மதத்தைப் பெற்று செயல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.” என்று தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com