நெல்லை ஆட்சியரகத்தில் உலா வந்த பாம்புகள்! விரைந்து வந்து பிடித்த தீயணைப்புத் துறையினர்!!
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விடுமுறை நாளில் பாம்புகள் உலா வந்ததை அடுத்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பாம்பை லாவமாக பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.
நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கொக்கிரகுளம் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் மழைக்காலங்களில் ஆற்றில் தண்ணீர் அதிகளவு செல்லும்போது மலைப்பகுதியில் இருந்து அடித்து வரப்படும் பாம்புகள் ஆற்றுப் படுகையில் உள்ள வீடுகள் உள்ளிட்ட பகுதிகளுக்குள் செல்வது வழக்கம்.
இந்த ஆண்டு அதி கனமழை பெய்த சூழலில் தாமிரவருணி ஆற்றில் ஒன்றரை லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் சென்றதால் ஆட்சியர் அலுவலகத்திற்குள்ளும் தண்ணீர் புகுந்தது. இதன் காரணமாக ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் தாலுகா அலுவலகம், கனிமவளத் துறை அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகம் என பல அலுவலக பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
இந்த நிலையில் மலைப்பகுதியில் இருந்து அடித்து வரப்பட்ட பாம்புகள், விஷ ஜந்துக்கள் ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் புகுந்து அவ்வப்போது வலம் வந்து ஊழியர்களை பதற்றம் அடைய செய்தது.
பேரிடர் கால கட்டுப்பாட்டு மையத்திற்குள் கட்டுவிரியன் பாம்பு பணி செய்து கொண்டிருந்த ஊழியர் காலருகே சென்றதைக் கண்டு பதறி அடித்து கூச்சலிட்ட நிலையில் கட்டுப்பாட்டு மையத்தில் பணியில் இருந்த தீயணைப்புத் துறை வீரர் பாம்பை பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தார்கள்.
இந்த நிலையில், கடந்த நான்காம் தேதி மாவட்ட ஆட்சியா் அலுவலக வாசலில் உள்ள செடிகளுக்கு இடையே கண்ணாடி விரியன் பாம்பு பதுங்கியிருப்பது புதன்கிழமை காலையில் தெரியவந்தது. இதுகுறித்த தகவலின்பேரில், பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய வீரா்கள் வந்து, அந்தப் பாம்பை பிடித்து சென்றனா். கடந்த செவ்வாய்க்கிழமையும் ஆட்சியா் அலுவலகத்தில் ஒரு பாம்பு பிடிபட்டது.
தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிடிபடும் விஷப்பாம்புகளால் ஊழியர்கள் மட்டுமின்றி மக்களும் அச்சத்தில் இருந்தனர்.
இந்த நிலையில், பொங்கல் பண்டிகை விடுமுறை ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது. இதன் காரணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் அரசு ஊழியர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. விடுமுறை நாளில் ஊழியர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் ஹாயாக உலா வந்த பாம்பு, ஓய்வெடுத்துக் கொண்டிருந்த கட்டுமான பணியாளர்கள் கண்ணில் பட்டது. மிக நீளமான பாம்பை பார்த்ததும் அச்சம் அடைந்த தொழிலாளர்கள், தீயணைப்புத் துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர்.
இதுகுறித்த தகவலின்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறை மீட்புப் பணி வீரர்கள் பாம்பை லாவமாக பிடித்து வனத்துறையிடம் ஒப்படைக்க கொண்டு சென்றனர்.
அண்மையில் பெய்த மழையால் தாமிரவருணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில், ஆட்சியா் அலுவலகத்தில் தண்ணீா் புகுந்தது. அப்போது, ஆங்காங்கே புதா்களில் ஒதுங்கிய பாம்புகள் தொடா்ச்சியாக பிடிபட்டு வருகின்றன. தொடர்ந்து மூன்றாவது முறையாக பாம்பு பிடிபட்டதால் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பாம்புகளின் அச்சுறுத்தல் தொடர்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.