‘ஹிந்தி தெரியாது போடா’: பாஜகவின் பதிவுக்கு உதயநிதி பதிலடி!

பாரதிய ஜனதா கட்சியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தின் பதிவுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.
‘ஹிந்தி தெரியாது போடா’: பாஜகவின் பதிவுக்கு உதயநிதி பதிலடி!

சென்னை: பாரதிய ஜனதா கட்சியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தின் பதிவுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் கருவறையில் பால ராமர் சிலை இன்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த விழாவில் பங்கேற்க நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சியினருக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டிருந்தது.

இந்த விழா குறித்து கடந்த வாரம் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ராமர் கோயில் திறப்புக்கு நாங்கள் எதிரி அல்ல, ஆனால், மசூதியை இடித்துவிட்டு கோயில் கட்டியதில் திமுகவுக்கு உடன்பாடில்லை என்று தெரிவித்திருந்தார்.

ஏற்கெனவே கடந்தாண்டு சநாதனத்தை பற்றிய உதயநிதி ஸ்டாலினின் கருத்துக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது.

இந்த நிலையில், பாஜகவின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் நேற்று உதயநிதி ஸ்டாலினின் புகைப்படத்தை பதிவிட்டு, “இந்த அநியாயக்காரர்களை அடையாளம் காணுங்கள். ராமர் கோயிலை எதிர்த்து, சநாதன தர்மத்தை அவமதிக்கிறார்கள்.” என்று ஹிந்தியில் பதிவிட்டிருந்தனர்.

பாஜகவின் இந்த பதிவுக்கு, ‘ஹிந்தி தெரியாது போடா’ என்ற வசனம் உள்ள டி-சர்ட் அணிந்திருக்கும் தனது புகைப்படத்தை பதிவிட்டு உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com