
சின்னத்திரை நடிகை பிரீத்தி சர்மா, மலர் தொடரிலிருந்து விலகிய நிலையில், அவருக்கு பதிலாக அந்த கதாபாத்திரத்தில் நடிகை அஸ்வதி நடிக்கவுள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவந்த மோதலும் காதலும் தொடர் முடிந்த கையோடு அவருக்கு மலர் தொடரில் நாயகியாக நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.
சின்னத்திரையில் இதுபோன்ற வாய்ப்புகள் எந்தவொரு முன்னணி நடிகைக்கும் அமையாத நிலையில், தமிழில் அறிமுகமான முதல் தொடரிலேயே அஸ்வதிக்கு முதல் தொடர் முடிந்தவுடன் அடுத்த தொடரில் நாயகியாக நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.
2021அம் ஆண்டு மலையாளத் தொடரில் நடித்ததன் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை அஸ்வதி. தொடர்ந்து குடும்பவிளக்கு என்ற தொடரிலும் நடித்திருந்தார்.
எனினும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மோதலும் காதலும் தொடரின் மூலம் முதன்மை நாயகியாக தமிழில் அறிமுகமானார். மோதலும் காதலும் தொடர் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
அதில் குழந்தைகள் நல மருத்துவராக நடித்த அஸ்வதியின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது. இந்தத் தொடர் கடந்த வாரத்துடன் முடிவடைந்தது.
இதனிடையே மலர் தொடரில் இருந்து நடிகை பிரீத்தி சர்மா விலகுவதாக சமீபத்தில் அறிவித்தார். அந்தத் தொடரில் நாயகியாக நடிப்பது யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.
இந்நிலையில் இந்தத் தொடரில் நடிகை அஸ்வதி நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சன் தொலைக்காட்சியில் மலர் தொடர் கடந்தாண்டு பிப். 27 முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இத்தொடர் அக்கா - தங்கை பாசத்தை மையமாகக் கொண்டு இந்தத் தொடர் எடுக்கப்பட்டு வருவதால், இல்லத்தரசிகளை வெகுவாகக் கவர்ந்துள்ளது. திங்கள் முதல் சனிக்கிழமை வரை நண்பகல் 12 மணிக்கு இத்தொடர் ஒளிபரப்பாகிறது.
மதிய நேரங்களில் ஒளிபரப்பாகும் தொடர்களில் மலர் தொடருக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இதனால், அதனைத் தக்கவைக்கும் நோக்கத்தில் மக்களிடம் நன்கு அறிமுகமான அஸ்வதியை நாயகியாக நடிக்கவைக்க மலர் குழு திட்டமிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.