
புது தில்லி: தென்மேற்குப் பருவமழை, வழக்கத்தை விடவும் ஆறு நாள்கள் முன்னதாக, நாடு முழுவதும் தொடங்கியிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்குப் பருவமழை, மெல்ல நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தொடங்கியிருந்த நிலையில், ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப் மாநிலங்களிலும் இன்று தொடங்கியிருக்கிறது. நாடு முழுவதும் ஜூலை 2ஆம் தேதி தென்மேற்குப் பருவமழை தொடங்கியிருப்பதாகவும், இது வழக்கமாக நாடு முழுவதும் ஜூலை 8ஆம் தேதிதான் தொடங்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
முன்னதாக, கேரளம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் மே 30ஆம் தேதி தென்மேற்குப் பருவமழை தொடங்கியது. இது வழக்கத்தைவிடவும் 6 நாள் முன்னதாகத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
தென்மேற்குப் பருவமழை வழக்கமாக அடுத்து மகாராஷ்டிரத்தில் வலுவடையும். ஆனால், குறைந்தது. அதுபோல, மேற்கு வங்கம், ஒடிசா, ஜார்க்கண்ட், பிகார், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் பருவமழைத் தொடங்க தாமதமானது. இதனால்தான், வடக்கு மற்றும் வடமேற்கு மாநிலங்களில் பல நாள்களுக்கு வெப்ப அலை வீசியது.
இதற்கிடையே ஜூன் 11 முதல் ஜூன் 27 வரை நாடு முழுவதும் பரவலாக வழக்கத்தைவிடக் குறைவான மழைப்பொழிவே காணப்பட்டது. ஜூன் மாதத்தில் இயல்பு மழை அளவு 165 ஆக இருக்கும் நிலையில், இந்த ஆண்டு 147 மி.மீட்டர்தான் மழைப்பொழிவு இருந்தது. கடந்த 2001ஆம் ஆண்டிலிருந்து கணக்கெடுத்தால் இதுதான் மிகவும் குறைவான மழைப்பொழிவாகும்.
ஆனால், ஜூலையில் இயல்பை விட அதிக மழைப்பொழிவு இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்த மழைப்பொழிவால் ஹிமாலய மாநிலங்கள் மற்றும் அதில் பாயும் ஆறுகளில் வெள்ளம்பெருக்கெடுக்கும் என்றும் கணித்துள்ளது.
ஆங்காங்கே ஒரு நாள் மழைக்கே விமான நிலையத்தின் மேற்கூரை சாய்ந்து விபத்துகள் நேரிட்டு வரும் நிலையில், தென் மேற்குப் பருவமழை தொடங்கியிருப்பதால், இந்த ஆண்டு எந்தவிதமான சம்பவம் காத்திருக்கிறதோ என்று மக்கள் அச்சப்படும் நிலை உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.