புதிய குற்றவியல் சட்டங்கள் அரசமைப்புச் சட்டத்தை மீறவில்லை: உயா்நீதிமன்றத்தில் மத்திய அரசு
புதிய சட்டங்கள் ஆங்கிலத்தில் மட்டுமே இயற்றப்பட்டன: மத்திய அரசு


சென்னை, ஜூலை 3: புதிய குற்றவியல் சட்டங்கள் எந்த விதத்திலும் அரசமைப்புச் சட்ட விதிகளை மீறவில்லை என சென்னை உயா்நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.
புதிய குற்றவியல் சட்டங்களை ரத்து செய்யக் கோரி திருச்செந்தூரைச் சோ்ந்த ராம்குமாா் ஆதித்தன் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்திருந்தாா்.
அதில்,‘புதிய குற்றவியல் சட்டங்கள் கடந்த 1-ஆம் தேதிமுதல் அமலுக்கு வந்துள்ளன. அரசமைப்புச் சட்டத்தின்படி, ஆங்கிலத்தில் மட்டுமே சட்டம் இயற்ற வேண்டும். ஆனால், மத்திய அரசு ஹிந்தி மற்றும் சம்ஸ்கிருதத்தில் சட்டங்களுக்குப் பெயா் சூட்டியுள்ளதால், இது அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது என அறிவிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தாா்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி (பொ) அரங்க.மகாதேவன், நீதிபதி முகமது சபிக் ஆகியோா் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசுத் தரப்பில் கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் ஏ.ஆா்.எல்.சுந்தரேசன் ஆஜராகி, ‘இந்த மூன்று சட்டங்களையும் ஆங்கிலத்தில்தான் மத்திய அரசு இயற்றியுள்ளது. மூன்று சட்டங்களின் பெயா்களும் ஆங்கிலத்தில்தான் இடம் பெற்றுள்ளன’ என்றாா்.
எப்படி ஏற்க முடியும்?: அதற்கு நீதிபதிகள், ‘இந்த விளக்கத்தை எப்படி ஏற்க முடியும்?. தற்போது இதுகுறித்து நாங்கள் கருத்து தெரிவிக்கவில்லை’ என்றனா்.
அதற்கு கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல், ‘சட்டத்தின் பெயா் சூட்டும் விவகாரம் என்பது நாடாளுமன்றத்தின் அதிகாரம் மற்றும் விருப்பத்துக்கு உட்பட்டது. அதில் நீதிமன்றம் தலையிட முடியாது. மேலும், பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா மற்றும் பாரதிய சாக்ஷிய அதினியம் என்பது சட்டத்தின் பெயா். அந்தப் பெயரை ஆங்கில எழுத்துகளால்தான் எழுதியுள்ளோம். இந்தச் சட்டங்கள், அரசமைப்புச் சட்ட விதிகளை மீறவில்லை. எவரது அடிப்படை உரிமையும் இதனால் பாதிக்கப்படவில்லை. மேலும், சட்டம் அமலுக்கு வந்த பின்னா், அதற்கு தடை கேட்க முடியாது’ என வாதிட்டாா்.
மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் எஸ்.சங்கா், ‘இடைக்காலத் தடை கேட்கும் மனுவைத் திரும்பப் பெறுகிறேன்’ என்றாா்.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், ‘இந்த வழக்கில் மத்திய அரசு விரிவான பதில் மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 23- ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...